கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி,  மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட,  இதர உடல்நல பிரச்சனை உள்ளவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து போடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. 


இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் கொரோனா  தடுப்பு மருந்து மையங்களை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ( ஏப்ரல் 7) வெளியிட்டது. 


45 வயதுக்கு மேற்பட்டவர்களில் குறிப்பிட்ட அளவினர் அலுவலகங்கள் (அரசு மற்றும் தனியார்) அல்லது உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் பணிபுரிவதால், அவர்களின் பணியிடங்களிலேயே தடுப்பு மருந்து வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.  


அதன்படி, வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் அவர்களது பணியிடங்களிலேயே தடுப்பூசி போடப்படும். தகுதியுடைய மற்றும் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும் ஆர்வம் உள்ள சுமார் 100 பேர் பணிபுரியும் இடங்களில் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்ககளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


 



கொரோனா தடுப்பூசி - காட்சி  படம் 


 


மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட பணிக்குழு மற்றும் நகராட்சி ஆணையர் தலைமையிலான நகர்ப்புற பணிக்குழு இத்தகைய பணியிடங்களை கண்டறியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகளை ஒருங்கிணைப்பதற்காக  பணியிடங்களின் நிர்வாகம் தொடர்பு அலுவலர் ஒருவரை கட்டாயம்  நியமிக்க வேண்டும். குறைந்தது, சுமார் 100 பேர் பணிபுரியும் இடங்களில் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 


கோவிட் 19 தடுப்பூசி போடப்படுவதை கண்காணிக்கும், கோ-வின் டிஜிட்டல் தளத்தில் பயனாளிகள் கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும். தனியார் பணியிடங்களில் தனியார் மையங்களில் வசூலிக்கப்படும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் பெறப்படும். 


இந்தியாவில் அன்றாட கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், சமீபத்திய நிலவரப்படி 8.70 கோடி தடுப்பூசிகள்  போடப்பட்டுள்ளன. 


குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, உலகில் வேகமாக தடுப்பூசிகள் போடும் நாடுகளில்,  நாளொன்றுக்கு சராசரியாக 30,93,861 தடுப்பூசிகள் என்ற அளவுடன் இந்தியா அமெரிக்காவை மிஞ்சிவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.