கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். நாட்டில் 85 சதவிகித மக்கள் வீட்டிலேயேதான் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள் என்கிறார் மருத்துவர் கஃபீல் கான்.
2017-ஆம் ஆண்டு, உத்தர பிரதேசம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் ஏற்பட்டபோது தனது சொந்த செலவில் ஆக்சிஜன் வாங்கி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர். ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் தற்போது கொரோனா மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில் தனது YouTube பக்கத்தில் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்பவர்கள் கவனிக்கவேண்டியவை என சில விஷயங்களை அவர் பகிர்ந்திருந்தார்.
“டெல்லி, குஜராத் என நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தபடியேதான் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள். அப்படிச் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் கைவசம் ஒரு தெர்மோமீட்டரையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களது உடல் வெப்ப அளவையும் ஆக்சிஜன் அளவையும் தினமும் இரண்டு வேளை ஒரு தனி நோட்டில் குறித்துக்கொள்ளுங்கள். ஒரே கழிவறை கொண்ட வீட்டில் இருக்கிறார்களா? உங்களுக்குப் பிறகு 15 நிமிட இடைவெளிவிட்டு மற்றவரை உபயோகிக்கச் சொல்லுங்கள். ரெஸ்ட் எடுப்பது மட்டும்தான் இதற்கான மிக முக்கியமான மருந்து. அறைக்குள்ளேயே சில நிமிடங்கள் நடக்கலாம். உங்கள் மருத்துவரிடம் பேசி தனிமைப்படுத்திக்கொள்ளும் காலத்தில் உங்களுக்கு இருமல் மூச்சுப்பிரச்சனை ஆகியவை ஏற்பட்டால் அதற்கான பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்கிவைத்துக்கொள்ளுங்கள்.
ஆக்சிஜன் அளவு 92 சதவிகிதம் இருக்கும் நிலையில் குப்புறப்படுத்துத் தலையை மட்டும் தூக்கியவாறான நிலையில் மூச்சுப்பயிற்சி செய்யவும். அது உங்களது ஆக்சிஜன் அளவைக் கூட்டும். அதற்குப் பிறகும் அதிகரிக்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டியது அவசியம்” என அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.