சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 


சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்டத் தொடங்கியுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. அதன் தொடர்ச்சியாக, ஜப்பான், தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.


’கோவிட் இன்னும் முடியவில்லை’


இதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று உயர்மட்ட அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கொரோனா நிலைமை குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.


கூட்டத்தை தொடர்ந்து, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மன்சுக் மாண்டவியா, "கோவிட் இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.






வாராந்திர ஆய்வுக் கூட்டம்


மேலும், கொரோனா நிலவரம் குறித்து கண்காணிக்க வாராந்திர கூட்டம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவது குறித்து வியூகம் அமைப்பது, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு புதிய விதிமுறைகள் விதிப்பது, உருமாறிய கொரோனா குறித்து நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்வது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தது.


அதேபோல, வெளிநாட்டில் இருந்து திரும்பும் இந்திய பயணிகள், நாட்டில் பரவும் கொரோனா வகை, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.


கொரோனா தொற்று உறுதி செய்த அனைவரின்  மாதிரிகளும் INSACOG மரபணு வரிசைமுறை ஆய்வகங்களுக்கு தினமும் அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.


அதென்ன BF.7 வகை?


செல் ஹோஸ்ட் மைக்ரோப் என்னும் ஆய்விதழில் வெளியான கட்டுரை ஒன்றில், 4.4 மடங்கு அதிக நடுநிலைப்படுத்தல் எதிர்ப்புத் திறனை BF.7 வகை கொரோனா கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2020-ல் உலகம் முழுக்கப் பரவி பாதிப்பை ஏற்படுத்திய வூஹான் வைரஸை விட, தடுப்பூசி போடப்பட்ட அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து உருவாகும் ஆன்டிபாடிகள் BF.7 வைரஸை அழிக்கும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.