கொரோனா வைரசின் பாதிப்பால் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களது இயல்புநிலையை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியாவிலும் கடந்தாண்டு முதல் கொரோனாவாலும், அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்காலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகவும், மூன்றாவது அலை எச்சரிக்கை காரணமாகவும் மக்கள் மத்தியில் தற்போது வரை கொரோனா அச்சம் இருக்கிறது. ஆனால், ஆந்திராவில் ஒரு குடும்பம் கடந்த ஒன்றரை ஆண்டாக கொரோனா பீதியில் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவடத்தில் உள்ளது ராஜோலு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான விவசாய தொழிலாளி. திருமணமான இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்திய அரசு பிறப்பித்த ஊரடங்கால், அவரும், அவரது குடும்பத்தினரும் வீட்டை உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டு வீட்டின் உள்ளேயே இருந்து வந்துள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அக்கம்பக்கத்தில் யாருடனும் பேசாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வந்துள்ளனர். மேலும், வீட்டினர் யாரும் வெளியில் போகாமல் இருப்பதற்காகவும், வெளி ஆட்கள் வீட்டின் உள்ளே வராமல் இருப்பதற்காக வீட்டின் கதவை எப்போதும் உள்பக்கம் பூட்டியே வைத்துள்ளனர். விவசாயத் தொழிலாளியின் மகன் மட்டும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக அவ்வப்போது வெளியில் சென்று வாங்கி வந்துள்ளான். அவனும் வெளியில் வந்தால் தேவையின்றி யாருடனும் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர்களுக்கு முதல்-அமைச்சர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிவிப்பதற்காக கிராம பஞ்சாயத்து செயலாளர் மற்றும் ஊழியர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மேலும், வீடு கட்டும் திட்டத்திற்கான படிவத்தை பூர்த்தி செய்துதருமாறு கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் வீட்டின் உள்ளே இருந்தபடியே கொரோனா பரவிவிடும், அதனால் வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம் என்று கூறி கதவை திறக்க மறுத்து விட்டனர். அக்கம்பக்கத்தினர், அந்த கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அந்த குடும்பத்தினர் கடந்த ஒன்றரை வருடமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளனர்.
உடனே, அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அறிவுறுத்தியும் அவர்கள் கதவை திறக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வீட்டைவிட்டு வெளியே வராமல் ஒரே இடத்தில் முடங்கியதாலும், சரியான உணவுகள் எடுத்துக்கொள்ளாததாலும் வீட்டின் உள்ளே இருந்த 5 பேரும் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகளும், காவல்துறையினரும் அந்த குடும்பத்தினரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கொரோனா அச்சத்தால் ஒன்றரை ஆண்டாக ஒரு குடும்பத்தினர் வீட்டின் உள்ளேயே முடங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.