நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என மக்களவையில் மத்திய கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அமித்ஷா சொன்ன முக்கிய தகவல்:
கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, "நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு கடந்த 2023ஆம் ஆண்டு, பிப்ரவரி 15ஆம் தேதி, அரசு ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டம் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபார்டு), தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் மாநில அரசுகளின் ஆதரவுடன், பால்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி, தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், ஐந்து ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பஞ்சாயத்துகளையும், கிராமங்களையும் உள்ளடக்கிய 2 லட்சம் புதிய பல்நோக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால்வளம், மீன்வள கூட்டுறவு சங்கங்களை நிறுவுவதை உள்ளடக்குகிறது.
புதிதாக தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள்:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் நிலையில் ஒருங்கிணைக்கப்படும் மத்திய அரசின் தற்போதைய திட்டங்களின் அங்கீகரிக்கப்பட்ட செலவினங்களைப் பயன்படுத்தி இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின்படி, 15.2.2023 அன்று திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் 30.6.2025 அன்று வரை மொத்தம் 22,606 புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், பால் பண்ணை மற்றும் மீன்வள கூட்டுறவு சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.