நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக அறியப்பட்ட ஜிதின் பிரசாதா பாஜகவில் ஐக்கியமாகி உள்ளார். அடுத்தாண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி வெளிப்படையாக பேசத்தொடங்கி உள்ளார்.



காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்களுக்கு புதிய பொறுப்புகளை கொடுக்கும்போது அவர்களின் கொள்கை பற்றையும் உறுதி செய்த பின்னர்தான் அவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வீரப்பமொய்லி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கு ஏற்கெனவே கடந்தாண்டு 23 தலைவர்கள் கடிதம் எழுதி இருந்தனர். இதில் வீரப்ப மொய்லியும் ஒருவர்.


தொடக்கத்தில் இருந்தே ஜிதின் பிரசாதாவின் கொள்கை பிடிப்பு சந்தேகத்துக்கு இடமானதாக இருந்தது. மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை அவரது பொறுப்பின் கீழ் காங்கிரஸ் கட்சி சந்தித்தது. அதில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை என்று கூறி உள்ள வீரப்ப மொய்லி, எல்லாவற்றுக்கும் மேலாக ஜிதின் பிரசாதாவிற்கு தனிப்பட்ட நோக்கம் இருந்ததாக குற்றம்சாட்டி உள்ளார். தகுதி இல்லாதவர்களை தலைவர்களாக உருவாக்க முடியாது. எனவே காங்கிரஸ் மேலிடம் உடனடியாக கட்சியை மறுசீரமைக்க வேண்டும். அப்போது தகுதி இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதை தவிர்க்க வேண்டும். கட்சியில் இருக்கும் இளம் தலைவர்களின் கடந்த கால வரலாறு, கொள்கை பற்றும் சாமானிய மக்களை அணுகும்முறை ஆகியவற்றை மதிப்பிட்டு அவர்களுக்கு முக்கியப் பொறுப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள வீரப்பமொய்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் 7 மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படவில்லை என்றால் மக்களவை தேர்தலை சந்திப்பது சிரமாக ஆகிவிடும் என எச்சரித்துள்ளார்.


 


காங்கிரஸ் தலைமை இன்னும் பாரம்பரிய பின்புலம் கொண்டவரகளை சார்ந்திருக்காமல் நம்மை நாமே சரி செய்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடிஉடன் அரசியல் களமாட தயாராக வேண்டும் என கூறியுள்ள வீரப்ப மொய்லி, அதற்கு கட்சியில் மிகப்பெரிய அறுவை சிகிச்சையை கட்சி மேலிடம் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தியை மாற்ற வேண்டுமா என்ற கேள்விக்கு சோனியா காந்தி தலைவராக இருப்பதில் எந்தப்பிரச்னையும் இல்லை என்றும், கட்சித் தொண்டர்களை வழிநடத்தும் திறமையும் உறுதியும் அவரிடம் இருப்பதாக வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்