’’எதிர்க்கட்சி எம்.பி.க்களின் திட்டத்தை அறிந்தே பிரதமர் மோடியிடம் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அதேபோல நேற்று மக்களவையில் அவரைப் பேச வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தேன்’’ என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் குடியரசுத் தலைவர் தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிக்காட்டி இருந்தன.
பிரதமர் மோடி பேசாதது ஏன்?
இந்த நிலையில், பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டதாகவும் அதனால்தான் பிரதமர் மோடி பேசவில்லை என்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மக்களவையில் பேசிய அவர், ’’நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் திட்டத்தை அறிந்தே பிரதமர் மோடியிடம் வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அதேபோல நேற்று மக்களவையில் அவரைப் பேச வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தேன்.
காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் திட்டம் தீட்டி இருந்தனர். காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா உள்ளிட்டோர் மக்களவை வரலாற்றில் இல்லாத சம்பவத்தை நிகழ்த்தத் திட்டமிட்டு இருந்தனர். வேண்டுமென்றே பிரதமர் மோடியைப் பேசவிடாமல் தடுத்தனர்.
ஜனநாயக மரபுகளையே உடைத்திருக்கும்
குறிப்பாக பிரதமர் குடியரசுத் தலைவரின் உரைக்கு பதிலளிக்க வேண்டியிருந்தபோது, காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் நாற்காலிக்கு அருகில் தகாத சம்பவத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்த தகவல் எனக்குக் கிடைத்தது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், அது நாட்டின் ஜனநாயக மரபுகளையே உடைத்திருக்கும். இதைத் தடுக்கவே பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்" என்றும் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். காகிதங்கள், பேம்ப்ளெட்டுகளை எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கொண்டு வரக்கூடாது என்றும் கூறிய ஓம் பிர்லா, தொடர்ந்து மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
நாட்டின் பிரதமர் மீது எதிர்க் கட்சி பெண் எம்.பி.க்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்ததாக, மக்களவை சபாநாயகரே குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.