Jothimani: இந்திய ஒற்றுமை யாத்திரையில் கமல்ஹாசன் பேசியதை எம்.பி. ஜோதிமணி மொழி பெயர்த்ததை கிண்டல் செய்த பா.ஜ.க.வினருக்கு, அவர் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். 


ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 24ம் தேதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரை தமிழில் பேசச் சொல்லி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். இதனால், தமிழில் கமல்ஹாசன் பேச, அதனை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆங்கிலத்தில்  மொழி பெயர்த்தார். இடையில் கமல்ஹாசன் ஆங்கிலத்தில் பேச, அதனையும் ஜோதிமணி ஆங்கிலத்திலேயே மொழிபெயர்த்து விட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, அதனை பா.ஜ.க.வினர் கிண்டல் செய்து வந்தனர். 


ஜோதிமணி பதில்:


இந்த நிகழ்வு குறித்தும், தான் கிண்டல் செய்யப்படுவது குறித்தும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது, ட்விட்டர் பக்கத்தில், "அன்பான பாஜகவினர்களே, கமல்ஹாசன் தமிழில் பேசியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யும்போது, அவர் ஆங்கிலத்தில் பேசியதையும் ஆங்கிலத்திலேயே மொழிபெயர்த்துவிட்டேன். இது நகைப்புக்குரிய விஷயம் தான். ஆனால் எனது மொழிபெயர்ப்பு மோடியின் டெலிப்ராம்பெட்டரை விட சிறந்தது" என பதிலடி கொடுத்துள்ளார். 






கடந்த 24ஆம் தேதி ஒற்றுமை யாத்திரையில்  பேசிய கமல்ஹாசன், “ ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை பயணத்தில் 2 கொள்ளுப்பேரன்கள் இணைந்து நடக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன். எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது எனக்காக அல்ல" என்று தெரிவித்தார். அப்போது இடைமறித்த ராகுல் காந்தி தமிழர்கள் இங்கு இருக்கிறார்கள், ஆகையால் நீங்கள் தமிழ் பேசுங்கள் என்று கமல் ஹாசனிடம் கோரிக்கை வைத்தார். 


இதையடுத்து தமிழில் கமல்ஹாசன் பேச தொடங்கிபோது, “தமிழில் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி என்னை கேட்டுக்கொண்டு இருக்கிறார். அதனால் அவரை என் சகோதரராக ஏற்றுக்கொண்டேன் என்று இல்லை. இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் இணைந்து நடக்கும் யாத்திரை. இவர் நேருவின் கொள்ளுப்பேரன். நான் காந்தியின் கொள்ளுப்பேரன். 


எந்தவொரு நெருக்கடி நம் அரசிலமைப்புக்கு வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். எந்த கட்சி ஆள்கிறது என்பது பற்றி எனக்கு கவலையில்லை. நான் அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன். நான் முதலில் ஆங்கிலத்தில்தான் பேசுவதாக இருந்தேன், சகோதரர் கோரிக்கையால் தமிழில் பேசுகிறேன். நான் இங்கு வருவதற்கு முன்பு பல பேர் என்னிடம் சொன்னார்கள். நான் ஒரு கட்சியின் தலைவன், நீங்கள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டால் உங்கள் அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என தெரிவித்தார்கள். அப்போது நான் சொன்னேன் எனது அரசியல் பயணம் மக்களுக்காக தொடங்கியது எனக்காக அல்ல." என்று பேசினார்.


ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் டெல்லிக்கு சென்று மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.