அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் மத்திய அரசு எப்போது கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) விசாரணையை அறிவிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியின் "குடை" கேலிக்கு திங்களன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பதிலடி கொடுத்தார்.
கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற பேரணியில், அம்மாநிலத்தைச் சேர்ந்த கார்கே, மூத்தவராக இருந்தாலும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி இதைப்பற்றி பேசுகையில், “கர்நாடகா மண்ணின் மகனான மல்லிகார்ஜுன் கார்கே மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, மக்கள் சேவைக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் சத்தீஸ்கரில் நடந்த காங்கிரஸ் அமர்வின்போது அவர் எப்படி நடத்தப்பட்டார் என்பதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே மரியாதை குறைவாக நடத்தப்பட்டார். சத்தீஸ்கரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த கூட்டத்தின் போது மல்லிகார்ஜுன் கார்கே குடையின் நிழலில் நிற்க கூட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு அருகில் இருந்தவருக்கு இந்த பாக்கியம் கிடைத்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தாலும், ரிமோட் கண்ட்ரோல் வேறு ஒருவரிடம் உள்ளது” என கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மல்லிகார்ஜுன் கார்கே தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "நரேந்திர மோடி ஜி, உங்கள் 'உண்மையான நண்பர்' யாருடைய குடையின் கீழ் நாட்டில் உள்ள அனைத்தையும் கொள்ளையடித்தார்? கம்பெனி ராஜ்ஜியத்தை தோற்கடித்து நாட்டை விடுவித்த நாங்கள் மூவர்ணக் கொடியின் நிழலில் நிற்கும் காங்கிரஸ்காரர்கள், நாட்டை ஒருபோதும் கம்பெனி ராஜ்ஜியமாக்க அனுமதிக்க மாட்டோம், அதானி மீது பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை எப்போது நடக்கும், சொல்லுங்கள்" என காங்கிரஸ் தலைவர் கேள்வி எழுப்பினார்.
ஹிண்டன்பர்க் அறிக்கையை வெளியிட்ட பிறகு, அதானி குழுமத்தின் மீதான மோசடி மற்றும் பங்குக் கையாடல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) நடத்த காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற பேரணியில், “பிரதமர் கிசான் சம்மன் நிதி உதவி திட்டம் தொடங்கியது முதல் இதுவரை சிறு விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2½ லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.50 ஆயிரம் கோடி பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம், விவசாயிகளின் முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்ய உதவும். கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு ரூ.25,000 கோடியாக இருந்த நாட்டின் விவசாய பட்ஜெட், தற்போது ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.