இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ மக்களவை தேர்தல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 1 மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பா.ஜ.க. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை:


அதே சமயத்தில், பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, காங்கிரஸ் ஸ்கெட்ச் போட்டு வேலை செய்து வருகிறது. அந்த வகையில், தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை இடம்பெற வைக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.


குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்பது, தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது, அரசின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை வழங்குவது ஆகியவற்றுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. 


தேர்தல் அறிக்கையில் எந்த மாதிரியான அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் ப. சிதம்பரம், நாளை ஆலோசனை செய்ய உள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு, இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.


ராகுல் போடும் மெகா பிளான்:


இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "கடந்த இரண்டு மாதங்களாக ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்ரா முன்னிலைப்படுத்தும் பஞ்ச் நீதி அல்லது நீதியின் ஐந்து தூண்கள் தேர்தல் அறிக்கையின் கருப்பொருளாக இருக்கும்" என்றார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மற்றும் அவர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதே பஞ்ச் நீதி என ராகுல் காந்தி கூறியுள்ளார்.


அதுமட்டும் இன்றி, INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்படும் என ராகுல் காந்தி ஏற்கனவே அறிவித்துவிட்டார். தேர்தல் அறிக்கையில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பெரிய, பெரிய விவசாய மண்டிகளில் (சந்தைகள்) இதுதொடர்பாக பேனர் வைக்கப்பட்டு விளம்பரம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.


அதேபோல, சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை காங்கிரஸ் முக்கிய பிரச்னையாக கையில் எடுத்துள்ளது. நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் கூட, இந்த பிரச்னைக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளித்திருந்தது. ஆனால், தேர்தலில் இந்த விவகாரம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


ஆட்சிக்கு வந்தால் மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்த போதிலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.