நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் 29ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவு பெறுகிறது. நாடாளுமன்ற விவாதங்களில் சீன பிரச்னை தொடர் பேசுபொருளாக இருந்து வருகிறது. 


இந்த பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ராகுல் காந்தி தொடர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறார்.


இதனிடையே, ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைபயணம் குறித்து பாஜக கடுமையாக விமர்சித்தது. அவர் ஒற்றுமை பயணம் மேற்கொள்ளவில்லை நாட்டை பிளவுப்படுத்த பயணம் மேற்கொள்கிறார் என சாடினர்.


இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நடைபயணத்திற்கு நடுவே பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "நாட்டுக்காக இந்தியாவின் பழம்பெரும் கட்சி (காங்கிரஸ்) சுதந்திரம் பெற்று தந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களின் உயிரையே தியாகம் செய்துள்ளனர்.


உங்கள் வீட்டில் உள்ள நாயாவது இந்த நாட்டுக்காக இறந்திருக்கிறதா? இன்னும், அவர்கள் (பாஜக) தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேச விரோதிகள் என்று அழைக்கப்படுகிறோம்" என்றார்.


நாடாளுமன்றத்தில் சீன எல்லை பிரச்னை குறித்த விவாதம் நடைபெறுவதை அனுமதிக்காத பாஜக அரசை விமர்சித்த கார்கே, "அவர்கள் (பாஜக அரசு) வெளியில் சிங்கம் போல் பேசுகிறார்கள். ஆனால், பார்த்தால் எலி போல் செயல்படுகிறார்கள்" என்றார்.


பாஜகவை எப்படி நாயுடன் ஒப்பீடு செய்வீர்கள் எனக் கூறி பாஜக தலைவர்கள், கார்கேவின் கருத்துக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். நாடாளுமன்றம் இன்று கூடியவுடன் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.


இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், "மல்லிகார்ஜுன் கார்கேவின் கருத்து, அவர் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய விதம் மற்றும் பொய்யைப் பரப்ப முயன்ற நோக்கம் ஆகியவற்றை நாங்கள் கண்டிக்கிறோம். அல்வாரில் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.


 






இதை தொடர்ந்து, பாஜகவினரை கிண்டல் செய்யும் விதமாக பேசிய கார்கே, "நான் இங்கே மீண்டும் சொன்னால், இந்த மக்களுக்கு (பாஜக) அது மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால், சுதந்திர போராட்டத்தின் போது மன்னிப்பு கேட்டவர்கள் சுதந்திரத்திற்காக போராடியவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். 


காங்கிரஸ் இந்தியாவைப் பிரிக்க யாத்திரை நடத்துகிறது என்றார்கள். அப்போதுதான் நான் சொன்னேன், காங்கிரஸ் எப்போதும் இந்தியாவை ஒன்றிணைக்கும் வேலையை செய்கிறது.


இதற்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்கள் உயிரைக் கொடுத்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தது யார் தெரியுமா?" என்றார்.