Congress Poll Committee: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேச மாநில பொறுப்பாளர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். 


சூடுபிடிக்கும் 2024ம் ஆண்டு தேர்தல்:


கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இழந்த ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் களமாட தயாராகி வருகிறது. அடுத்த மாதம் இறுதியிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே பரப்புரையை தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளது. அண்மையில் தான் தேர்தல் வாக்குறுதிகளை தயார் செய்தற்கான 16 பேர் கொண்ட குழுவையும், தேசிய அளவிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த 5 பேர் கொண்ட குழுவையும் காங்கிரஸ் தலைமை நியமித்தது. அந்த வரிசையில் தற்போது தேசிய அளவில் முக்கிய நிர்வாகிகளை மாற்றி, பலருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.






காங்கிரஸ் புதிய மாநில பொறுப்பாளர்கள் நியமனம்: 


கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றம் தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ராஜஸ்தன் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலர் சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக இருந்த பிரியங்கா காந்தி அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவினாஷ் பாண்டேவிற்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர் முகுல் வாஷ்னிக் குஜராத் மாநிலத்திற்கும், ரந்தீப் சிங் சுர்ஜ்வாலா கர்நாடக மாநிலத்திற்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜிதேந்திர சிங் அசாம் மற்றும் மத்தியபிரதேச மாநில பொறுப்பாளராகவும், திபக் பபாரிய டெல்லி மற்றும் ஹரியானா மாநில பொறுப்பாளராகவும், குமாரி செல்ஜா உத்தராகண்ட் மாநில பொறுப்பாளராகவும், ஜி.எ. மிர் ஜார்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநில பொறுப்பாளராகவும், தீபா தஷ்முன்ஷி கேரளா, லட்சத்தீவுகள் மற்றும் தெலங்கானா பிராந்திய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, ஜெய்ராம் ரமேஷ் தொடர்பு பிரிவு பொறுப்பாளராகவும், கே.சி, வேணுகோபால் அமைப்பு ரீதியான பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு பொறுப்பாளர் யார்?


ரமேஷ் சென்னிதாலா மகாராஷ்டிரா மாநிலத்தையும், பீகார் மாநிலத்தை மோகன் பிரகாஷ் மேற்பார்வையிடுவர். மேகாலயா, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகள் டாக்டர் செல்லகுமார் தலைமையில் செயல்பட உள்ளன. ஒடிசா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டாக்டர் அஜோய் குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரை பாரத்சிங் சோலங்கியும்,  ராஜீவ் சுக்லா ஹிமாச்சல பிரதேசம் மற்றும் சண்டிகரையும் கண்காணிக்க உள்ளார். ராஜஸ்தானை சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மேற்பார்வையிட,  பஞ்சாப் தேவேந்தர் யாதவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோவா, டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகியவை மாணிக்ராவ் தாக்ரேவின் தலைமையில் உள்ளன. திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய மாநிலங்கள் கிரிஷ் சோடன்கர்முக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு மாணிக்கம் தாகூர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பிரியங்கா காந்தியின் வேலை என்ன?


தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் எடுத்துள்ள இந்த அமைப்பு ரீதியான நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேநேரம், நீண்ட காலமாக உத்தரபிரதேச மாநில பொறுப்பாளராக இருந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், புதியதாக எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால், 2024ம் ஆண்டு தேர்தலில் அவரது பணி என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.