இன்னும் ஒரு மாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியலில் ட்விஸ்க்கு மேல் ட்விஸ்ட் நடந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்று அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.


இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்?


இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தாலும் மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் அபிஷேக் மனு சிங்வி தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் சங்கத்தை தந்துள்ளது. 68 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதுமட்டும் இன்றி, 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது.


எனவே, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், 25 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ள பாஜக, மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளரை களமிறக்கி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி, பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களித்ததே இதற்கு காரணம்.


வாக்குப்பதிவின்போது, காங்கிரஸ் வேட்பாளருக்கும் பா.ஜ.க. வேட்பாளருக்கும் சமமான வாக்குகள் கிடைத்தது. இருவருக்கும் தலா 34 வாக்குகள் கிடைத்தது. இறுதியில், டாஸ் போட்டு பாஜக வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி பெரும் பின்னடைவை தந்துள்ளது.


மாநிலங்களவை தேர்தலில் ஷாக்:


இச்சூழலில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழுந்து விட்டதாக பாஜக கூறி வருகிறது. சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர பா.ஜ.க. திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பாதுகாப்புடன் பாஜக ஆளும் ஹரியானாவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 முதல் 6 எம்எல்ஏக்களை பாஜக தலைவர்கள் அழைத்து சென்றுள்ளதாக இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம் சுமத்தியுள்ளார்.


இதுகுறித்து சுக்விந்தர் சிங் சுகு கூறுகையில், "ஹரியானா காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப்-இன் கான்வாய் மூலம் 5-6 எம்.எல்.ஏ.க்கள் அழைத்துச் செல்லப்பட்ட விதம்... எம்.எல்.ஏ-க்களின் குடும்பத்தினர் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள். தங்களின் குடும்பத்தினரை அவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும். 


 






கவலைப்படத் தேவையில்லை. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியும் இருக்கும் எதிர்க்கட்சியும் இருக்கும். ஆனால், எதிர்க்கட்சிகள் (பாஜக) செய்யும் ரவுடித்தனத்தை ஹிமாச்சல் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார். வட இந்தியாவை பொறுத்தவரையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் ஒரே மாநிலம் இமாச்சல பிரதேசம்தான். மற்றப்படி, தென் இந்தியாவில் கர்நாடக, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.