மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருமல் மருந்து குடித்து 24 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த சிறுவன் 115 நாட்களுக்குப் பின் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளான். 

Continues below advertisement

சிந்த்வாராவைச் சேர்ந்த அந்த ஐந்து வயது சிறுவன் இருமல் மருந்து குடித்ததால் கண் பார்வையை இழந்துள்ளான். அந்த மாவட்டத்தின் ஜடாச்சாபர் என்ற கிராமத்தைச் சேர்ந்த குணால் யதுவன்ஷி என்ற சிறுவன், கோல்ட் ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டு பாதிக்கப்பட்டவர்களில் ஒருவன். இந்த கோர சம்பவத்தில் 24 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழந்த நிலையில் குணால் யதுவன்ஷி மட்டும் பல மாத தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைத்தான். அவனுக்கு நீண்ட நாட்கள் டயாலிசிஸ் மற்றும் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3 மாதங்களுக்குப் பின் குணால் யதுவன்ஷி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளது அவனது குடும்பத்திற்கு மீண்டும் நம்பிக்கை வெளிச்சத்தை கொடுத்துள்ளது. எனினும் சிறுவனுக்கு கண் தெரியாமல் போனது பெரும் இழப்பாக மாறியுள்ளது. இருமல் மருந்தால் ஏற்பட்ட பின் விளைவுகள் சிறுவனை முழுவதுமாக பாதித்துள்ளது. கண் பாதிப்பு மட்டுமல்லாது, நடப்பதிலும் குணால் யதுவன்ஷி சிரமத்தை எதிர்கொண்டிருக்கிறார். அவர் முழுவதுமாக குணமடைவார் என்பது நிச்சயமற்றது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Continues below advertisement

நடந்தது என்ன?

2025ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி குணால் யதுவன்ஷிக்கு குடும்பத்தில் இலேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் குணாலை உள்ளூர் மருத்துவர் டாக்டர் பிரவீன் சோனியிடம் அழைத்துச் சென்று காட்டியுள்ளனர். அவர் மாத்திரை அளித்ததோடு, இருமல் சிரப்பையும் கொடுத்துள்ளார். ஆனால் அந்த இருமல் மருந்தால் சிறுவன் குணால் குணமடைவதற்கு பதில் மிகப்பெரிய அளவில் உடல்நிலையில் மோசமடைந்தார். 

இதனால் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் குணால் யதுவன்ஷியின் இரண்டு சிறுநீரகங்களும் இருமல் மருந்தால் பாதிக்கப்பட்டு செயலிழந்ததாக தெரிய வந்தது. ஆகஸ்ட் 30ம் தேதி உடல் நிலை மேலும் மோசமடைய சிறுவன் நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பின்னர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். கிட்டதட்ட ஒன்றரை மாதங்களாக தினமும் வலி மிகுந்த டயாலிசிஸ் சிகிச்சையளிக்கப்பட்டது. 

அவன் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். எனினும் முடிந்தவரை சிகிச்சையளிப்பதாக உறுதியளித்தனர். தொடர்ந்து மருத்துவ உதவியுடன் போராடிய குணால் யதுவன்ஷி இறுதியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். 

இந்த இருமல் மருந்தால்  அவரது கண்களில் இருந்த திரவம் வறண்டு பார்வை இழக்க காரணமாக அமைந்தது. குணால் திரும்பி வரமாட்டான் என தாங்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்டதாகவும், தற்போது பார்வை இல்லாவிட்டாலும் அவன் இருப்பதே போதும் என தந்தை தெரிவித்துள்ளார்.