Coldrif Syrup Banned: பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை குடித்த ‘கோல்ட்ரிஃப்‘; மேலும் ஒரு மாநிலத்தில் தடை; ம.பி-யில் டாக்டர் கைது
மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 11 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்துக்கு மற்றொரு மாநிலமும் தடை விதித்துள்ளது. மேலும், மத்திய பிரதேசத்தில் அதை பரிந்துரைத்த மருத்துவர் கைது.

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இருமல் மருந்து உட்கொண்ட 11 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 2 மருந்துகள் அதற்கு காரணம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு மருந்தான கோல்ட்ரிஃப் தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு அந்த மருந்துக்கு தடை விதித்தது. ஏற்கனவே மத்திய பிரதேசத்திலும் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு மாநிலமும் தற்போது தடை விதித்துள்ளது.
11 குழந்தைகளின் உயிரை குடித்த ‘கோல்ட்ரிஃப்‘ இருமல் மருந்து
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயது வரை உள்ள 9 குழந்தைகள் கடந்த 20 நாட்களுக்குள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு அதற்கு காரணம் என்பது தெரியவந்தது. இந்த நிலையில், இதேபோல் ராஜஸ்தானிலும் இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 2 குழந்தைகள் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11-ஆக அதிகரித்தது.
இருமல் மருந்துகளில் ரசாயன வேதிப்பொருள்
இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், தமிழ்நாட்டில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்து மற்றும் வேறொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் இருமல் மருந்து ஆகிய இரு வேறு இருமல் மருந்துகளை அந்தக் குழந்தைகள் உட்கொண்டது கண்பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில், அந்த குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைசால் எனப்படும் ரசாயன வேதிப்பொருள் இருந்ததாக அறிக்கை வெளியானது.
பெயிண்ட், மை போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படும் அந்த ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இது தொடா்பாக பல் துறை விசாரணைக் குழுவை மத்திய அரசும், மத்திய பிரதேச அரசுகளும் அமைத்துள்ளன.
காஞ்சிபுரத்தில் தயாராகும் ‘கோல்ட்ரிஃப்‘
இதனிடையே, மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மாவில் தயாரிக்கப்பட்ட(13 பேட்ச்) 'கோல்ட்ரிஃப்' மருந்தை, அந்த நிறுவனத்திற்கே சென்று ஆய்வு மேற்கொண்ட தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநா் தலைமையிலான குழுவினா், மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் அதன் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
கேரளாவிலும் ‘கோல்ட்ரிஃப்‘-க்கு தடை
11 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரை பறித்த இந்த ‘கோல்ட்ரிஃப்‘ இருமல் மருந்திற்கு ஏற்கனவே மத்திய பிரதேச அரசும், தமிழ்நாடு அரசும் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், தற்போது கேரளாவிலும் ‘கோல்ட்ரிஃப்‘ இருமல் மருந்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, மருந்து கட்டுப்பாட்டாளர் கோல்ட்ரிஃப் மருந்தின் விநியோகம் மற்றும் விற்பனையை முழுமையாக நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் மருத்துவர் கைது
இந்நிலையில், கோல்ட்ரிஃப் இருமல் மருத்தை தயாரித்த ஸ்ரீசென் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. இறந்த குழந்தைகள் பெரும்பாலும் பராசியாவில் உள்ள குழந்தை நல டாக்டரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தற்போது குழந்தைகளுக்கு கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















