உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் யு.யு. லலித், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். கிட்டத்தட்ட 37 ஆண்டு காலமாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த வந்த பயணத்தை நினைவு கூர்ந்து பேசிய அவர், ஒரு வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் தனது பணியை மகிழ்ச்சியுடன் செய்ததாக குறிப்பிட்டார்.
அலுவல் ரீதியாக கடைசி நாளான இன்று தனது பயணம் குறித்து பல அனுபவங்களை லலித் பகிர்ந்து கொண்டார். 16ஆவது தலைமை நீதிபதி யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் முன் ஆஜராகி உச்ச நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கியதையும் தற்போது தலைமை நீதிபதி பதவியை அவரது மகனும் மூத்த நீதிபதியான சந்திரசூட்டுக்கு சென்றிருப்பதை சிறப்பான உணர்வு என்றும் லலித் கூறினார்.
நீதித்துறை பயணம் குறித்து விரிவாக பேசிய அவர், "நான் இந்த நீதிமன்றத்தில் 37 வருடங்கள் கழித்திருக்கிறேன். இந்த நீதிமன்றத்தில் எனது பயணம் கோர்ட் எண் 1 மூலம் தொடங்கியது. நான் பம்பாயில் பயிற்சி செய்து கொண்டிருந்தேன். பின்னர், தலைமை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் முன் ஒரு வழக்கைக் குறிப்பிட இங்கு வந்தேன். எனது பயணம் இந்த நீதிமன்றத்தில் இருந்து தொடங்கியது. இன்று அது அதே நீதிமன்றத்தில் முடிவடைகிறது" என்றார்.
மூத்த நீதிபதியாக இருந்த போது காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா என்று சக நீதிபதிகளை நோக்கி கேள்வி எழுப்பியவர் லலித் என்பது குறிப்பிடத்தக்கது.
1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் பிறந்த யு.யு.லலித், தனது 27வது வயதில் 1983 ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 2014 ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட யு.யு.லலித், 2ஜி வழக்கில் அரசுதரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணாவின் பிரிவு உபச்சார விழாவில் லலித் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அப்போது, தலைமை நீதிபதியாக யு.யு. லலித் தேர்வாகியிருந்தார். அந்த சமயத்தில் அவர் ஆற்றிய உரையில், உச்சநீதிமன்றத்தில் கொண்டு வர உள்ள மாற்றங்கள் தொடர்பாக பேசினார்.
அதன்படி அவர் உச்சநீதிமன்றத்தில் 3 விஷயங்களில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறியிருந்தார். முதலில் வழக்குகளை பட்டியலிடுவதில் கூடுதல் வெளிப்படை தன்மை கொண்டு வர உள்ளதாக கூறினார்.
இரண்டாவதாக அவசர வழக்குகள் தொடர்பாக உடனடியாக முறையிட ஒரு வழி உருவாக்கப்படும் என்று தெரிவித்தார். இவை தவிர உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து செயல்படும் வகையில் வழி வகுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும் அவர், “உச்சநீதிமன்றத்தின் முக்கியமான பங்கு ஒரு சட்டம் அல்லது தீர்ப்பை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கும்படி அளிக்க வேண்டும் என்பது தான். அதை செய்ய அதிகமான நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வை உடனடியாக உருவாக்க வேண்டும். அப்போது இந்த விவகாரங்களில் உள்ள குழப்பங்கள் தெளிவு பெற்று தெளிவான தீர்ப்பை அளிக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.