குடியரசு தின விழாவில் திடீரென மயங்கி விழுந்த காவல் ஆணையர்! – பதறிய கவர்னர் – என்ன ஆச்சு?
நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது

திருவனந்தபுரத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் கவர்னர் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து விட்டு மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த காவல் ஆணையர் திடீரென மயங்கி விழுந்தது அனைவருக்கும் பதற்றத்தை கொடுத்தது.
நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைப்பது வழக்கம்.
அதன்படி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றினார். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அணிவகுப்பை கண்டு களித்தார்.
இதேபோல் மாநிலங்களிலும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று குடியரசு தின விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக போக்குவரத்து காவல் படையினரின் அணிவகுப்புடன் வந்தார்.
அதேபோல் கேரளாவிலும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது அவரின் அருகில் நின்று கொண்டிருந்த காவல் ஆணையர் தாமஸ் ஜோஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற காவலர்கள் காவல் ஆணையரை தாங்கி பிடித்து வேறு இடத்திற்கு தூக்கி சென்றனர்.
இதுகுறித்து ஆம்புலன்ஸ்க்கு தகவவ் தெரிவிக்கப்பட்டு காவல் ஆணையர் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின் அவர் நிகழ்ச்சிக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் காவல் ஆணையர் திடீரென மயங்கி விழுந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. சிறிது நேரத்திற்கு பிறகு சரியானது.
சாதாரணமாக கொடியேற்ற விழாவில் இதுபோன்று மாணவர்கள் ஆங்காங்கே மயங்கி விழுவது வழக்கமான ஒன்றுதான். காரணம் அவர்கள் காலையிலேயே சாப்பிடாமல் வந்திருப்பார்கள். அல்லது வெயில் சேராமல் கூட இருக்கலாம். ஆனால் காவல் ஆணையரே மயங்கி விழுந்தது சற்று நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.