ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்படபத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை, 8 உலோகங்களின் கலவையில் 7 மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.


ஜி20 உச்சி மாநாடு:


உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும், ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில்  நடைபெற உள்ளது. டெல்லியில் பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் தான் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அந்த மண்டபத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட, 18 டன் எடையிலான பிரமாண்ட நடராஜர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


சோழர் கலையில் உருவான சிலை:


பாரத் மண்டபத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நடராஜர் சிலை, உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சோழர்களின் தலைநகரான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலை எனும் பகுதியில் தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. வெண்கல சிலை வார்ப்புகளில் தலைசிறந்த கைவினைஞரான ஸ்ரீகந்தா ஸ்தபதி என்பவர் தான் தனது குடும்பத்தினர் மற்றும் சக கலைஞர்களுடன் இணைந்து, மிகக் குறைந்த காலத்திலேயே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையை உருவாக்கியுள்ளார். சோழர் காலத்து கலையின் அடிப்படையில் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக ஸ்ரீகந்தா ஸ்தபதி தெரிவித்துள்ளார்.


7 மாதங்களில் உருவான சிலை:


சிலை தயாரிப்பதற்காக அரசு கோரிய டெண்டரை சமர்பித்த பிறகு, இந்திரா காந்தி தேசிய கலை மையம், கலாச்சார அமைச்சகம் ஸ்ரீகந்தா ஸ்தபதியை தொடர்பு கொண்டுள்ளது. அப்போது, அடுத்த  ஏழு மாதங்களுக்குள் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிற்பத்தை உருவாக்க வேண்டும் தெரிவித்துள்ளனர். அதன்படி, 40 குடும்பங்களை சேர்ந்த 600 கலைஞர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து இருபத்தி ஏழு அடி உயரம், 21 அடி அகலமும், 18 டன் எடையிலான இந்த பிரமாண்ட சிலையை வெறும் 7 மாதங்களில் உருவாக்கியுள்ளனர். இதன் பீடம் மட்டுமே 10 டன் எடையிலானது என கூறப்படுகிறது. இந்த சிலையானது முகம், உடல், கைகால் என மொத்தம் 120 தனித்தனி பாகங்களாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முழு சிலையாக பாரத் மண்டபம் முன்பு நிறுவப்பட்டுள்ளது. சுமார் 10 கோடி ரூபாய் செலவில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.


உருவான முறை:


திட்டமிட்ட சிலை தோற்றத்திலான மெழுகு மாதிரி தயாரானதும், காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள வண்டல் மண்ணை பூசி சூரிய வெளிச்ச்சத்தில் அது உலர வைக்கப்பட்டது. அதன் மீது பல அடுக்குகளுக்கு மண்ணை பூசி சிலைக்கான அச்சு வலிமையாக்கப்பட்டது. தேவையான பகுதிகளில் உலோக கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன.  அப்படி உருவாக்கப்பட்ட களிமண் அச்சு பின்னர் சூடாக்கப்பட்டு மெழுகு உருக்கி வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து சிலைக்கு தேவையான உலோகக் கலவை சூடாக்கி உருக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு, அச்சில் ஊற்றப்படுகிறது.  அது நன்கு குளிர்ந்த பிறகு அச்சில் இருந்து  தோராயமான வடிவிலான சிற்பம் பெறப்பட்டது. அதன்பிறகு, அது செதுக்கப்பட்டு, தேவையான உரிய நுண்ணிய வேலைப்பாடுகள் மூலம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. பொதுவாக கோவில்களுக்கு வழங்கப்படும் பஞ்சலோக சிலைகளில்  தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு ஆகிய ஐந்து உலோகங்களின் கலவை பயன்படுத்தபப்டும். ஆனால், இந்த நடராஜர் சிலையில் செம்பு, பித்தளை, ஈயம், தகரம், பாதரசம், இரும்பு, தங்கம் மற்றும் வெள்ளி என எட்டு உலோகங்களின்  கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த சிலை பல நூற்றாண்டுகளுக்கு எந்த தேய்மானமும் இல்லாமல் காட்சியளிக்கும் என ஸ்ரீகந்தா ஸ்தபதி தெரிவித்துள்ளார். மேலும், வயதாக வயதாக இந்த சிலையின் அழகு கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.


வரலாற்று சிறப்பு:


சுவாமிமலை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும், இது காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. இந்த பகுதி புண்ணிய ஸ்தலமாக இருப்பதுடன், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டுவதற்கு சோழப் பேரரசர் ராஜ ராஜ சோழனால் பயன்படுத்தப்பட்ட ஸ்தபதிகளால் செய்யப்பட்ட வெண்கல சிலைகளுக்கும் இந்த நகரம் புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


செங்கோல்:


அண்மையில் டெல்லியில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட, சோழர் கால கலையை பறைசாற்றும் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபம் வளாகத்திலும், தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட நடராஜர் சிலை கம்பீரமாய் காட்சியளிக்கிறது.