Shocking Video : சத்தீஸ்கரில் உள்ள தத்தெடுப்பு மையத்தில் இரண்டு குழந்தைகள் கொடூரமாக தாக்கப்பட்டு படுக்கையில் வீசப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொடூர தாக்குதல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கான்கேர் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மாநில அரசின் திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மையத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், அங்கு இளம்பெண் ஒருவர் குழந்தைகளை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தரையில் தூக்கி வீசுகிறார். அதன்பிறகு கன்னத்தில் அறைந்து சிறுமியைத் தூக்கி அருகில் உள்ள கட்டிலில் வீசி விட்டு மீண்டும் தாக்குகிறார். அந்த சமயத்தில் அருகில் இருந்த மற்றொரு சிறுமியையும் கட்டில் மீது தூக்கி வீசி அவரையும் தாக்குகிறார்.
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிகளுக்கு உரிய சிகிச்சையும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டதில் குழந்தைகளை கொடூரமாக தாக்கியது சீமா திவேதி என்று அடையாளம் காணப்பட்டள்ளது.
இதனை அடுத்து, சிறுமிகள் மீது தாக்குதல் நடத்தும் காப்பக மேலாளர் சீமான திவேதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து கான்கர் மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்ந்த அதிகாரியையும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்பேரில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பல் சீமா திவேதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
காரணம்
இதுகுறித்து சீமா திவேதி கூறுகையில், ”இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன் நடந்ததாகவும், அப்போது தனது மனநிலை சரியில்லாமல் இருந்ததால் தான் இரண்டு குழந்தைகளை கொடூரமாக தாக்கியதாக விசாரணையில் கூறினார். மேலும், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து சாக்லெட்டுகளை இந்த குழந்தைகள் அடிக்கடி வாங்குவதால் இதுபோன்று நடந்துகொண்டேன்” என்று தெரிவித்தார். குழந்தைகளை அடித்ததற்கு மன்னிப்பு கோரியதோடு, அதன்பிறகு மையத்தில் இதுபோன்று நடக்கவில்லை என்று சீமா திவேதி கூறியுள்ளதாக தெரிகிறது.