Chandrababu Naidu: முதலமைச்சரான பிறகு தான் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவேன் என, தான் போட்டிருந்த சபதத்தை சந்திரபாபு நாயுடு பூர்த்தி செய்துள்ளார்.
சட்டமன்றம் வந்த சந்திரபாபு நாயுடு:
அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து, நான்காவது முறையாக அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய ஆட்சி அமைந்தபிறகு, ஆந்திர மாநில சட்டமன்றம் முதன்முறையாக இன்று கூடியது. அதையொட்டி சட்டப்பேரவைக்கு வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூரண கும்ப மரியாதை:
சுமார் இரண்டரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு முதன்முறயாக, சந்திரபாபு நாயுடு இன்று சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். அப்போது, சட்டப்பேரவை வளாகத்தில் தரையில் படுத்து வணங்கினார். பிறகு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டு, சந்திரபாபு நாயுடு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வாயிலில் காத்திருந்த துணை முதமைச்சர் பவன் கல்யாண், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்பு சட்டப்பேரவைக்குள் சென்று, சந்திரபாபு நாயுடு முதல் நபராக சட்டமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் செய்தனர்.
சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு:
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சரானார். சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவரானார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கடும் கருத்து மோதல் அவ்வப்போது வெடித்து வந்தது. அப்படி இருக்கையில், தான் 2021ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி ஆந்திர சட்டப் பேரவையில், தன் மனைவி குறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் அவதூறாகவும் இழிவாகவும் பேசுவதாகக் குற்றம்சாட்டினார். மேலும், இனி இந்த சட்டப்பேரவைக்குள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் காலடி எடுத்து வைப்பேன் என்று கண்ணீர் மல்க சபதமிட்டார். கைகளைக் கட்டியவாறே சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைச்சராகி, 2 வருடங்கள் 7 மாதங்கள் மற்றும் 2 நாட்களுக்குப் பிறகு மாநில சட்டப்பேரவைக்குள் நுழைந்து தனது சபதத்தை நிறைவேற்றியுள்ளார்.