LPG Cylinder Price: நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிலிண்டர் விலை குறைப்பு:
கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை நிலையாக இருந்து வருகிறது. அவ்வப்போது வணிக சிலிண்டர்களின் விலை மட்டுமே மாற்றமடைந்து கொண்டு வந்தது. கடைசியாக மார்ச் 1ஆம் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10 கோடி எரிவாயு இணைப்புகள் உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 32 லட்சம் பேர் சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1,053 ஆகவும், மும்பையில் ரூ.1,052.50 ஆகவும், சென்னையில் ரூ.1,068.50, கொல்கத்தாவில் 1,079 ரூபாயகவும் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலங்கானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும், அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தலும் நடக்கவிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வணிக சிலிண்டரின் விலை எவ்வளவு?
வணிக சிலிண்டர்களின் விலை ஏப்ரல் 1 ஆம் தேதி 2,192.50 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை கடந்த மே மாதம் 1ம் தேதி 171 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.2021.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 84.50 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், ஜுலை மாத, வணிக சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்ந்தது. அதன்பின், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.99.75 குறைக்கப்பட்டு தற்போது 1,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எதன் அடிப்படையில் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது?
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.