பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவை மாற்றயமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், RAW முன்னாள் தலைவர், முன்னாள் ராணுவ தளபதிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று நடந்த முப்படைகளுடனான முக்கிய கூட்டம்

கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 26 அப்பாவி மக்கள் பலியாகினர். இந்நிலையில், பாகிஸ்தானை பின்னணியாகக் கொண்ட தீவிரவாதிகள் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, பிரதமர் தலைமையில் முப்படைகளுடனான கூட்டம் நேற்று நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப் படைத் தலைவர் அமர் பிரீத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களையடுத்து, அதில் பாகிஸ்தானின் பங்கும் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இருநாடுகளுக்குமிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கணிப்புகள் வெளியாகிவரும் நிலையில், இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் இறுதி வரை பின்தொடர்ந்து, அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்குவதாக பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார். இதனால், நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது, எங்கு, எப்போது, எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க, முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை மோடி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தின்போது, பயங்கரவாதத்தை நசுக்குவது நமது தேசிய தீர்மானம் என்பதை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதாக தெரிகிறது. இந்திய ராணுவத்தின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தின் முக்கிய முடிவாக, தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழுவின் புதிய தலைவராக இந்திய உளவுத்துறையான ‘ரா‘-வின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ராணுவ சேவைகளிலிருந்து ஓய்வுபெற்ற மேற்கு விமானப்படை முன்னாள் தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, தெற்கு முன்னாள் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் மற்றும் ரியர் அட்மிரல் மோன்டி கன்னா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களோடு, இந்திய காவல் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்களான ராஜீவ் ரஞ்சன், மன்மோகன் சிங் ஆகியோரும், முன்னாள் ஐஎஃப்எஸ் தூதர் பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோரும் இந்த 7 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியாவின் திட்டம் என்ன.?

அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என, பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்திய தேசிய பாதுகாப்புக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அனுபவம் வாய்ந்த முன்னாள் அதிகாரிகளை மத்திய அரசு மீண்டும் பாதுகாப்புக் குழுவில் இணைத்திருப்பதால், தாக்குதல் நடத்தும்போது, அவர்களது அனுபவம் கைகொடுக்கும் என்ற எண்ணத்தில் தான் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்ற கேள்வியும் எழுகிறது.

அப்படியானால், பாகிஸ்தானில், தீவிரவாத நிலைகள் மீது இந்தியா விரைவில் தாக்குதல் நடத்தும் என்பது இதன் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதா.? பொறுத்திருந்து பார்ப்போம்.