Cabinet Ministers Meet: பிரதமர் மோடி தலைமையில் இன்று அதாவது, ஜூலை 12ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.  பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆட்சியில் உள்ள பாஜக மிகவும் தீவிரமாக திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள அமைச்சர்கள் கூட்டத்தில் தீவிரமாக யுக்திகள் தீட்டப்படவுள்ளது. மேலும், அமைச்சரவையில் மாற்றங்கள் கொண்டு வரவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கேரளாவில் வலிமை அடைய மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 


ஏற்கனவே அமைச்சரவையில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை விடுவிக்க பாஜக முடிவெடுத்துவிட்டதால், அவரை மாநிலங்களவைத் தேர்தலுக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யச் சொல்லியதால், அவரும் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களைக் கவர புதிய திட்டங்களை வகுக்கவும் பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இம்முறையும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்க தீவிர ஆலோசனை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ஏற்கனவே கடந்த 3ஆம் தேதி பிரதமர் தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. முதலில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தெலுங்கானா சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி பொறுப்புகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அமைச்சர்களாக உள்ளவர்களில் செயல்பாடு குறைவாக உள்ள அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, இணை அமைச்சராக இருப்பவர்களில் சிலருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பவுள்ளதாகவும் டெல்லி வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. 


வட இந்திய மாநிலங்களில் பெய்து வரும் கனமழையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் மீட்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கபடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.