தமிழகத்தின் குன்னூர் அருகே ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் தவறுதலாக நிலப்பரப்பில் மோதி (controlled flight into terrain (CFIT) விபத்துக்குள்ளானதாக முப்படைகள் நடத்திய விசாரணைக் குழுவில் தெரிய வந்துள்ளது.
கடந்த டிசம்பர் 8ம் தேதி, இந்திய விமானப்படையின் எம்.ஐ-17 வி-5 ஹெலிகாப்டரில், வெலிங்டன் பாதுகாப்பு சேவை பயிற்சி கல்லூரியில் உரையாற்ற சென்ற, இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார். இதில், ஜெனரல் பிபின் ராவத்தின் துணைவியார் மதுலிகா ராவத், படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வந்த குரூப் கேப்டன் வருண்சிங் என மொத்தம் 14 படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து ஒட்டமொத்த தேசத்தையும் நிலைகுழைய செய்தது. ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விபத்துக்கான காரணம்:
விமானியின் தவறுதலால், நிலப்பரப்பில் மோதி (controlled flight into terrain (CFIT) ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று விசாரனையில் கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூடிய விரைவில், விசாரணைக் குழு தனது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க இருப்பதாக தி இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
Controlled flight into terrain என்றால், சரியாக இயங்கும் தன்மை கொண்ட விமானம், தரையிறங்கும் நேரத்தில் சில பல துல்லியமற்ற அணுகுமுறைகளால் நிலபரப்பில் மோதி விபத்துக்குள்ளாகும் வகையாகும். இத்தகையை விமான விபத்துக்கள் பெரும்பாலும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதாகும் கூறப்படுகிறது.
வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருத்தல், சூழ்நிலை விழிப்புணர்வை உணராது இருத்தல், நிலபரப்பு பற்றிய புரிதல் இல்லாமை, மோசமான வானிலை சமயத்தில் (instrument meteorological conditions) மாற்று விதிமுறைகளை கடைபிடித்தல், மோசமான தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிஎப்ஐடி (CFIT) வகையிலான விமான விபத்து ஏற்படலாம் என்று பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் (International Air Transport Association, IATA) தெரிவிக்கிறது.
இந்தியாவின் முதலாவது முப்படைகளி்ன் தலைமைத் தளபதியான ஜெனரல் பிபின் ராவத், பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்கள் உட்பட நமது ராணுவம் தொடர்பான பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார். ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான அவரது முயற்சிகள் தேசத்தின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும் என இந்திய ராணுவம் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்