Lalu Prasad Yadav: லாலு பிரசாத் யாதவ் வீட்டில் ரெய்டு.. பீகாரில் அதிரடி சோதனையில் இறங்கிய சிபிஐ..!
பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ரயில்வேயின் குரூப் டியில் ஏராளமானோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 2004-2009 வரை லாலு ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவரது குடும்பத்தினர், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து நிலத்தை அன்பளிப்பாகவோ அல்லது குறைந்த விலையிலோ பெற்றதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த ஊழலில் லாலு யாதவின் மகனும் தற்போது பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக சிபிஐ கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்து, ஜூலை மாதம் லாலுவின் சிறப்புதுறை அதிகாரியாக இருந்த போலா யாதவை கைது செய்தனர்.
நில மோசடியில் லாலு குடும்பம் சிக்கியது எப்படி?
கிட்டத்தட்ட இந்த விவகாரம் 14 ஆண்டுகளுக்கு பழமையானது. கடந்த 2022 ம் ஆண்டு மே 18ம் தேதிதான் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. முதலில் ரயில்வேயின் குரூப் டி பிரிவில் மக்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர். நில ஒப்பந்தம் செய்யப்பட்டவுடன், அனைவருக்கும் முறையாக நிரந்தரமான வேலை வழங்கப்பட்டது.இதன்மூலம், பாட்னாவில் 1.05 லட்சம் சதுர அடி நிலத்தை லாலு குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாகவும், இந்த நிலத்தை மலிவு விலைக்கு விற்று, பணமாக்க பேரம் பேசியதாகவும் சிபிஐ தகவல் தெரிவித்தது.