கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


கல்லூரியின் முன்னாள் முதல்வர் கைது: இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே சம்பவம் நடந்த கல்லூரியின் முதல்வரான சந்தீப் கோஷ் மீது சந்தேக கண்கள் பாய்ந்து வருகின்றன. குறிப்பாக, இந்த சம்பவம் பெரிய பிரச்னையாக வெடித்த உடனேயே தன்னுடைய கல்லூரி முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். 


சம்பவம் நடந்த உடனேயே காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் தாமதம் செய்தது, கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்களிடம் தவறான தகவல்களை அளித்தது சந்தீப் கோஷ் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்க செய்தது.


வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சந்தீப் கோஷ் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினர்.


முதல்வராக இருந்தபோது ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சந்தீப் கோஷ் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பாக அவரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.


சிபிஐ நடவடிக்கைக்கு காரணம் என்ன? பெண் மருத்துவர் வழக்கு தொடர்பாக அவரிடம் ஏற்கனவே 15 நாள்களாக சால்ட் லேக்கில் அமைந்துள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், கொல்கத்தாவில் உள்ள சிபிஐயின் நிஜாம் அரண்மனை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


சந்தீப் கோஷ் கல்லூரி முதல்வராக இருந்த காலத்தில், நிதி முறைகேடுகள் நடந்ததாக மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் டாக்டர் அக்தர் அலி புகார் அளித்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது கூட சந்தீப் கோஷ்க்கு எதிராக நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.


"எப்ஐஆர் பதிவு செய்ய முதல்வர் ஏன் முன் வரவில்லை? அவரை யாராவது தடுத்தார்களா? அவர் ஏன் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்? இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது" என இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பியிருந்தார்.