காவிரியில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகவிற்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் 24 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டதிலும் இதே முடிவுதான் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவும் அடுத்த 15 நாட்களுக்குத்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எதிராகவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்த அவசர மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள அவசர மனு மீது 3 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையையும் சமர்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த உத்தரவின் பேரில், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று அதாவது ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு மாநிலங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு தரப்பில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு மத்தியில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைக்கு தீர்வாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு தமிழ்நாட்டிக்கு கர்நாடக அரசு கட்டாயம் 419 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடவேண்டும். இந்த ஆணையம் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அன்று முதல் இது வரை அதாவ்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையும் சேர்த்து 23 முறை காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை காக்க தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு தேவையான நீர் கிடைக்காததால், காவிரி ஒழுங்காற்று ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில், தமிழ்நாடு அரசு சார்பில் விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் கார்நாடக அரசு தரப்பில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர்தான் திறந்து விட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 5 ஆயிரம் வீதம் 15 நாட்களுக்கு திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.