மழைப்பொழிவு குறைவாக இருப்பதால் தமிழ்நாடு கேட்கும் அளவுக்கு காவிரி தண்ணீர் தர இயலாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 


தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து  முன்வைத்த கோரிக்கை மனுக்கள் மீது,  முடிவு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடியது. இதில், கர்நாடகாவில் 47 சதவிகித அளவிற்கு பற்றாக்குறை நிலவுவதால் குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. முக்கிய அணைகளில் போதுமான நீர் இல்லாததால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது என்பது இயலாத செயல். தமிழ்நாடு அரசு கேட்கும் நீரை கொடுத்தால் பெரும் சிக்கல் ஏற்படும். மழைப்பொழிவுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் 


ஒவ்வொரு மாதமும் காவிரியில் இருந்து விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம்  டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்த  கூட்டத்தில், "தமிழ்நாட்டுக்கு முறைப்படி திறந்து விடவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை. எனவே, உடனடியாக தண்ணீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும்" என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. 


எதிர்ப்பும், உத்தரவும்:


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடாகா அரசு பிரதிநிதிகள்,  தமிழக அதிகாரிகளிடம் மிரட்டும் தொனியிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அதிகாரிகள் இந்த கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினர். அதேநேரம், 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. இதற்கிடையில் தமிழ்நாடு அரசு சார்பில் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இதனை விசாரித்த நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு எந்த வகையில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது என கேள்வியெழுப்பினர். மேலும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும் செப்டம்பர் 1ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என  மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். அதேசமயம் மேலாண்மை ஆணையத்தில்  தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவை குறைக்க அனுமதி கோரி கர்நாடக அரசு அளித்த மனு அளித்திருந்தது.


அதேபோல் ஆணையம் உத்தரவிட்ட நீரின் அளவு போதுமானதல்ல என்று தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த இரண்டு மனுக்கள் மீதும் காவிரி மேலாண்மை ஆணையம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடியது குறிப்பிடத்தக்கது.