தீபாவளிப் பண்டிகைக்காக பத்திரிகையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


இது தொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர்,  "எந்த ஒரு ஊடக நிறுவனத்தின் பத்திரிகையாளருக்கும் ரொக்கப் பரிசு வழங்கச் சொல்லி தான் தனது அலுவலக அதிகாரிகள் யாரிடமும் சொல்லவில்லை. இது காங்கிரஸ் வேண்டுமென்றே கிளப்பிவிட்டுள்ள பிரச்சாரம். காங்கிரஸ் கட்சி ஊழல் உற்பத்தி தொழிற்சாலை ஆகிவிட்டது" என்றார். 


காங்கிரஸ் கட்சி கர்நாடக அரசு பத்திரிகையாளர்களுக்கு தீபாவளிப் பரிசாக லட்சக்கணக்காக பணம் வழங்கியதாக எழுப்பிய குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்துவரும் பிரச்சாரம் தொடர்பான கேள்விகளுக்கு முதல்வர் பொம்மை இவ்வாறாக பதிலளித்தார்.


காங்கிரஸ் இதற்காக ஒரு டூல்கிட் உருவாக்கி செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கர்நாடகாவில் பத்திரிகையாளர்களுக்கு தங்கக்காசு, ஐ ஃபோன், லேப்டாப் ஆகியன வழங்கியதாக அவர் தெரிவித்தார். அதற்கான ஆதரங்கள் இருக்கின்றன. அதனால் காங்கிரஸ் கட்சியினருக்கு இப்படியான குற்றச்சாட்டுகளை எழுப்புவதற்கான தார்மீக பொறுப்பு ஏதுமில்லை என்றார். அதுபோல் லோக் ஆயுக்தா போலீஸில் இது தொடர்பாக புகாரளித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பொம்மை, புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவடையட்டும். அதுவரையில் பத்திரிகையாளர்களை களங்கப்படுத்த வேண்டாம் என்றார்.


குற்றச்சாட்டு என்ன?


கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தீபாவளியன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகளை அனுப்பியதன் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ், ஊழல் வழக்குப் பதிவுசெய்ய வலியுறுத்தியதுடன், முதல்வரை ராஜினாமா செய்யக் கோரியுள்ளது.


இது தொடர்பாக சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சி பே சிஎம் ( PayCM ) என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கியது. அதாவது பே டிஎம் ( PayTM )  போல் ரைமிங்காக உருவாக்கப்பட்ட ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கினர்.


மேலும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா, "பசவராஜ் பொம்மை அரசின் லஞ்சம் அப்பட்டமாக வெளிவந்துள்ளது. இந்த முறை பொறுப்பு முதல்வரின் வீட்டு வாசலில் உள்ளது. இந்த முறை,  பசவராஜ் பொம்மை, கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் 1 லட்சம் ரொக்கத்தை அனுப்புவதன் மூலம் ஒட்டுமொத்த பத்திரிகையாளர் சகோதரத்துவத்திற்கும் லஞ்சம் கொடுக்க ரகசியமாகவும், வெளிப்படையாகவும், சதித்திட்டம் தீட்ட முயன்றார். லஞ்சத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்திய எங்கள் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கு ஹாட்ஸ் ஆஃப்” என்று கூறியிருந்தார். 


டூல்கிட் என்பது. ஒரு இணையதள தொகுப்பு. எங்காவது போராட்டம் நடந்தால் , அதை நியாயப்படுத்த மற்றும் மிகப் பெரிய அளவில் பரப்பி போராட்டத்தை விஸ்வரூபமாக்க ஒரு வழிமுறை. இது நல்ல காரணங்களுக்கான போராட்டம் என்றால் உதவிகரமாக இருக்கும். அதுவே தவறான விஷயத்துக்கு பரப்பப்பட்டால் பிரச்சினை அதிகமாகும். இந்நிலையில் தற்போது பே சிஎம் ஹேஷ்டேக் காங்கிரஸ் திட்டமிட்டு உருவாக்கிய டூல்கிட் என்று பாஜக அரசு குற்றஞ்சாட்டுகிறது. கர்நாடக அரசியலில் இந்த லஞ்ச சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.