கொரோனா கட்டுப்பாடுகளை எல்லா இடங்களிலும் விதிக்க முடியாது என்றும், ஏனெனில் இது பொருளாதாரத்தை பாதிக்கலாம் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் பிடியிலிருந்து வெளியே வந்த உலகம் தற்போது ஒமிக்ரானின் பிடியில் சிக்க ஆரம்பித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸானது தற்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த சூழலில் ஒமிக்ரான் தொற்று டெல்டா வைரஸைவிட 70 மடங்கு அதிகம் பரவும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் நேற்றைய நிலவரப்படி, கொரோனா நோய் தொற்றால், 1,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் 540 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கங்கா சாகர் மேளா அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலம். மேற்கு வங்க மாநிலத்தில் இந்த விழாவையொட்டி, கங்கா சாகர் தீவுக்கு உலகத்தில் உள்ள ஏராளமான பகதர்கள் வருகை புரிந்து புனித நீராடுவது வழக்கம்.
இமயமலையில் உற்பத்தியாகும் கங்கை பல்வேறு மாநிலங்கள் வழியாகச் சென்று வங்கக் கடலில் சங்கமிக்கிறது. கங்கை நதி சங்கமிக்கும் முகத்துவாரம் கங்கா சாகர் என்றழைக்கப்படுகிறது. இந்த தீவுக்கு வந்து பக்தர்கள் புனித நீராடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எந்த விழாக்களும் இங்கு நடைபெறவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு விழா நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட முதல்வர் மம்தா பானர்ஜி உள்ள சாகர் தீவுக்குச் சென்றுள்ளார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “இங்கிலாந்தில் இருந்து விமானங்களில் வரும் மக்களிடையே பெரும்பாலான ஓமிக்ரான் வழக்குகள் கண்டறியப்படுகின்றன. ஓமிக்ரான்1 சர்வதேச விமானங்கள் வழியாக வருகின்றன என்பது உண்மைதான். ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்.
மக்களின் பாதுகாப்பையும் நாம் கவனிக்க வேண்டும். விரைவில் முடிவெடுப்போம்.வழக்குகள் அதிகரிக்கும் இடங்களை குறி வைக்க வேண்டும். எல்லா இடங்களிலும் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது, ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததைப் போல் பொருளாதாரம் பாதிக்கப்படலாம். கொல்கத்தாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் ரயில்கள் மற்றும் விமானங்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மாஸ்க் அணிய வேண்டும். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதனிடையே கங்கா சாகர் கபில் முனி கோயில் தலைமை பூசாரியாக இருக்கும் கியான் தாஸ், கொரோனா வைரஸ் எல்லாம் இல்லை எனவும் கங்காசாகர் மேளாவிற்கு பக்தர்கள் கண்டிப்பாக வருவார்கள் எனவும் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் எல்லாம் இல்லை. இந்த மத தலத்திற்கு வருவதை மக்கள் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தலால் எந்த விழாக்களும் இங்கு நடைபெறவில்லை. கங்கா சாகர் மேளாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த முறை கங்கா சாகர் மேளாவிற்கு பக்தர்கள் கண்டிப்பாக வருவார்கள்” எனத் தெரித்தார்.