ஆளுக்கொரு அஜெண்டா வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டலில் நடத்தப்படும் தொலைக்காட்சி விவாதங்களால்தான் அதிக மாசு ஏற்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளது.
தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில், "தொலைக்காட்சி விவாதங்களால் தான் எல்லாவற்றையும் அதிக மாசு ஏற்படுகிறது. அங்கு விவாதிப்போர் ஆளுக்கொரு கொள்கை வைத்துக் கொண்டு அதன்படி பேசுகின்றனர். அவர்களின் அறிக்கைகள் எல்லாம் நிலைமையின் உண்மைத்தன்மையைத் தாண்டி பொத்தாம் பொதுவாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
ஐந்து அல்லது ஏழு நட்சத்திர ஓட்டலில் அமர்ந்து கொண்டு விவசாயிகள் விவசாயக் கழிவை எரிப்பதால் தான் 30 முதல் 40 சதவீதம் காற்று மாசு ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். நீங்கள் என்றேனும், ஒரு விவசாயி அவர் வைத்திருக்கும் நிலத்திற்கும், அதில் பயிர் செய்யப்படும் பயிருக்கும் ஏற்றவாறு தான் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்று உங்களால் சொல்ல முடியுமா? அந்த உண்மையை மறந்துவிட்டு இல்லை தோதாக புறந்தள்ளிவிட்டுப் பேசுகிறோம். உச்ச நீதிமன்ற தடையை மீறியும் டெல்லியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. தீபாவளிப் பண்டிகை முடிந்து 10 நாட்கள் ஆன பின்னரும் கூட பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. அதைப் பற்றி பேசாமல் தொலைக்காட்சி விவாதங்கள் விவசாயிகள் மீது பழி போடுகின்றன. எல்லாவற்றையும் விட தொலைக்காட்சி விவாதங்கள் தான் மாசுபாட்டை அதிகரிக்கின்றன" என்றார்.
முன்னதாக டெல்லி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு ஷிங்வி, விவசாயக் கழிவு எரிப்பால் ஏற்பட்ட மாசு தொடர்பாக முழுதாக கணக்கிடப்படவில்லை என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உண்மையான மாசைவிட தொலைக்காட்சி விவாதங்களிலேயே அதிக மாசு ஏற்படுகிறது என்ற காத்திரமான கருத்தைத் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணை அடுத்த புதன் கிழமைக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக நேற்று உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அவசரக் கூட்டத்தை டெல்லி அரசு கூட்டியது. அதன்படி, டெல்லியில் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் ஆஃப்லைன் மோடில் வகுப்புகளை எடுக்கவும், தனியார் நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா இரண்டாவது அலையால் மோசமாக பாதிக்கப்பட்டு பல கட்ட ஊரடங்கை சந்தித்த தலைநகர் டெல்லி இப்போது, காற்று மாசால், மாசுக் கட்டுப்பாட்டு ஊரடங்கில் உள்ளது.
சிறுவர்கள், முதியோர் என பலருக்கும் மூச்சுத் திணறல், சரும வியாதி, கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன.