ஆண், பெண் ஆகிய சொற்களுக்கான அர்த்தத்தை கேம்பிரிட்ஜ் டிக்சனரி புதுப்பித்துள்ளது.


குறிப்பிட்ட பாலினத்தில் பிறந்தவர்களை தவிர, மற்ற குறிப்பிட்ட பாலினமாக அடையாளப்படுத்தி கொள்பவர்களும் ஆண்/பெண்தான் என அர்த்தம் மாற்றப்பட்டுள்ளது.


ஆண் - வேறு பாலினத்தில் பிறக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், ஆணாக வாழ்ந்து தங்களை ஆண் என அடையாளப்படுத்தி கொள்ளும் வயது வந்தவர். இப்படி அர்த்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


அதேபோல, வேறு பாலினத்தில் பிறக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், பெண்ணாக வாழ்ந்து தங்களை பெண் என அடையாளப்படுத்தி கொள்ளும் வயது வந்தவர் பெண் என்றும் அர்த்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


ஆணின் அர்த்தத்தை விளக்கும் வகையில் டிக்சனரியில் இதற்கான இரண்டு எடுத்துக்காட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, மார்க் ஒரு திரு நம்பி (பிறக்கும் போது பெண் என்று சொல்லப்பட்ட ஒரு ஆண். அறுவை சிகிச்சையின் மூலம் பாலினத்தை மாற்றுவதற்கு முன்பு ஆணாக வாழ அவரின் மருத்துவர் அவரை ஊக்குவித்தார்" என டிக்சனரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பெண் என்ற அர்த்தத்திற்கான கொடுக்கப்பட்டுள்ள எடுத்துகாட்டில், "தேசிய அலுவலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் திருநங்கை அவர். ஆணாக பிறந்த பெண்தான் மேரி" என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆண், பெண் சொல்களுக்கான அர்த்தம் புதுப்பிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ள கேம்பிரிட்ஜ் டிக்சனரியின் செய்திதொடர்பாளர், " அக்டோபரில் பெண்களுக்கான கூடுதல் அர்த்தத்தில் எங்கள் ஆசிரியர்கள் இதைச் சேர்த்துள்ளனர். 


பெண் என்ற வார்த்தையின் பயன்பாட்டு முறைகளை கவனமாக ஆய்வு செய்து, இந்த வரையறை ஆங்கிலம் கற்றுக்கொள்பவர்கள் மொழி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தனர். பெண்ணுக்கான அர்த்தத்தின் முதல் வரையறை மாறாமல் உள்ளது" என்றார்.






இதுகுறித்து பயனர் ஒருவர் குறிப்பிடுகையில், "கேம்பிரிட்ஜ் அகராதி "பெண்" என்பதன் வரையறையை மாற்றிவிட்டது. மொழியைக் கட்டுப்படுத்த முடிந்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார்.


அக்டோபரில் அர்த்தத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அர்த்தம் புதுப்பிக்கப்பட்டதற்கு சமூக ஊடகங்களில் சிலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், பலர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


ஆண், பெண்ணாக அடையாள படுத்தி கொள்ளும் LGBT சமூகம், இந்த மாற்றத்தை வரவேற்றுள்ளனர்.