மேற்கு வங்க அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். 


இதுகுறித்து நேற்று மம்தா செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், தற்போதைய சூழலில் அமைச்சரவை விரிவாக்கம் என்பது அவசியமானதாகிறது. பல துறைகள் அமைச்சர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது. மூத்த அமைச்சர்கள்  சுப்ரதா முகர்ஜி (Subrata Mukherjee) மற்றும் சதன் பாண்டே (Sadhan Pande) இறந்து விட்டனர். பார்த்தா சாட்டர்ஜி சிறையில் இருக்கிறார். இப்படியிருக்கையில், பணிகளை யார் செய்வார்கள்? பணிகளை யாராவது ஒருவர் செய்ய வேண்டும் அல்லவா? எல்லா துறைகளின் வேலைகளையும் நானே செய்வதென்பது முடியாத ஒன்று.” என்று மம்தா கூறினார். 


மேற்கு வங்க அமைச்சரவையில், 11 துறைகள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


அமைச்சரவையில் மேலும் ஆறு பேர் புதிதாக பொறுப்பேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்க அமைச்சரவையில் தற்போது 20 கேபினட் அமைச்சர்கள் இருக்கிறார்கள். விதிகளின்படி, 44 அமைச்சர்கள் வரை அமைச்சரவையில் இடம்பெறலாம்.






 


ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் விவகாரம்:


திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவரும், மேற்கு வங்க தொழில் துறை அமைச்சருமான பார்த்தா சட்டர்ஜி, ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் வழக்கில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டார். 


இதன்காரணமாகவும், மேற்கு வங்க அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. புதிதாக ஐந்து பேர் இதில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஊழல் சர்ச்சை காரணமாக முழு அமைச்சரவையும் கலைத்துவிட்டு புதிதாக உருவாக்கப்பட உள்ளதாக என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் மம்தா ‘அப்படியான திட்டம் ஏதும் இல்லை .’ என்று பதில் அளித்துள்ளார். 


மேலும், புதிய அமைச்சரவையில், பார்த்தா பொவோமிக் ( Partha Bhowmik), பாபுல் சுப்ரியோ (Babul Supriyo), தபாஸ் ரே (Tapas Ray), உதயன் குஹா (Udayan Guha ) உள்ளிட்டோர் புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும், இம்முறை ஒரு நபருக்கு ஒரு பொறுப்பு மட்டுமே வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட பொறுப்புகள் வழங்குவது அவர்கள் இல்லையென்றால் மொத்த துறைகளின் பணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்த்தா சட்டர்ஜி வசம் நான்கு துறைகள் இருந்ததாகவும், அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் ஐந்து பொறுப்புகளை வகித்தது குறிப்பிடத்தக்கது. 


புதிய மாவட்டங்கள்:


மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை 23 மாவட்டங்கள் இருந்தன. தற்போது 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுந்தர்பன், இச்செமதி, ரனாகாட், பிஷ்னுபூர், ஜாங்கிபூர், பெஹ்ராம்பூர் மற்றும் பாசிர்ஹாட்டில் ஆகிய 7 மாவட்டங்கள் உருவாக்கப்படும்” என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


அமைச்சரவைக் கூட்டம்:


மம்தா பானார்ஜி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது என்று கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தினார்.