பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் திருத்தியமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Continues below advertisement

கால்நடைகளுக்கு குறைந்த விலையில் மருந்து:

இந்தத் திட்டம் தேசிய கால்நடை, நோய் கட்டுப்பாடு, பசு மருந்தகங்கள் என மூன்று கூறுகளைக் கொண்டது. தீவிர கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டம், தற்போதுள்ள கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்களை நிறுவுவதற்கும் அவற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் உதவிடும்.

Continues below advertisement

நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவு, விலங்குகளுக்கான நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசுகளுக்கு உதவி செய்வது போன்ற துணைக் கூறுகளையும் கொண்டுள்ளது. பசு மருந்தகங்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட புதிய அம்சமாகும்.

இந்தத் திட்டங்களுக்காக 2024-25, 2025-26 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான மொத்த செலவு 3,880 கோடி ரூபாயாகும். இதில், நல்ல தரமான, குறைந்த விலையில் பொதுவான மருந்துகளை வழங்குவதற்காக 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, பசு மருந்தகத்தின் கீழ் மருந்துகளின் விற்பனைக்கான ஊக்கத்தொகை ஆகியவை அடங்கும்.

விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மோடி அரசு:

கோமாரி நோய், கன்று வீச்சு நோய், மூளை தண்டுவட திரவம், தோல் கட்டி நோய் போன்ற நோய்களால் கால்நடைகளின் உற்பத்தித்திறன் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இது போன்ற  நோய்களைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவும் வகையில் சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் இழப்புகளைக் குறைக்க இயலும்.

நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகளின் துணைக்கூறுகள் மூலம் கால்நடை சுகாதார சேவையை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்குவதற்கும், பிரதமரின் வேளாண் நல மையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பொதுவான கால்நடை மருந்துகளை பசு மருந்தகங்கள் மூலம் கிடைக்கச் செய்யவும் இத்திட்டம் வகை செய்கிறது.

 

தடுப்பூசி, தொடர் கண்காணிப்பு, சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் கால்நடை நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் இத்திட்டம் உதவுகிறது. மேலும், இத்திட்டம் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஊக்குவித்து, விவசாயிகளின் பொருளாதார இழப்புகளைத் தடுக்க உதவுகிறது.