மீட்கப்பட்ட தொழிலாளியான விஸ்வஜீத் குமார் வர்மா சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 17 நாட்களின் துயரத்தை பகிர்ந்துள்ளார். 






இதுகுறித்து ஏ.என்.ஐக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், “ மண் சரிந்து விழுந்தவுடன் நாங்கள் நெருக்கடியை சந்தித்தோம். சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டோம் என்று எங்களுக்குத் தெரிந்தது. முதல் 10-15 மணி நேரம் நாங்கள் சிரமத்தை எதிர்கொண்டோம். ஆனால் பின்னர், எங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் உலர் பழங்கள் வழங்க குழாய் போடப்பட்டது. பின்னர் ஒரு மைக் மூலம் நான் எனது குடும்ப உறுப்பினர்களுடன் பேச முடிந்தது. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இனி தீபாவளியைக் கொண்டாடுவேன்." எனத் தெரிவித்தார். 


தொடர்ந்து, சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளி சுபோத் குமார் வர்மா, 41 பேரையும் பத்திரமாக வெளியே கொண்டு வர முயற்சித்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.






இதுகுறித்து அவர் வீடியோ ஒன்றில் பேசியபோது, “"முதல் 24 மணிநேரம் கடினமாக இருந்தது, ஆனால் அதன் பிறகு குழாய் மூலம் எங்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நான் இப்போது முற்றிலும் நலமாக இருக்கிறேன்” என தெரிவித்தார். 


 உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள். அந்த தொழிலாளிகளில் ஒருவரின் பெயர் சோனு, அவர் பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் வசிப்பவர். செய்தியாளர்களிடம் பேசிய சோனுவின் தாயார், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு முழு மனதுடன் நன்றி தெரிவித்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு தனது மகன் கிராமத்திற்குத் திரும்புவார் என்றும் கூறினார். அப்போது பேசிய அவர், “என் மகனை என் மடியில் வைத்த அரசுக்கு நன்றி. என் மகனை வெளியே அழைத்து வந்தவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். என் அடி மனதில் இருந்து அவர்களுக்கு மீண்டும் பல நன்றிகள். என் மகனை வெளியே எடுத்தவர்களும் எனக்கு குழந்தைகளைப் போன்றவர்கள்தான்” என தெரிவித்தார்.