பொருளாதார வளர்ச்சி 7%


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2023ஐ நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பொருளாதார ஆய்வறிக்கை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டது.


அதன்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டில் 7 சதவீதமாக இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் உள்ளது. அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கலாம் என ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.


"இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே இருக்கிறது"


நாட்டின் பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த வரம்பிற்குள் வந்துவிட்டது. மேலும் ஏப்ரல் முதல் நவம்பவர் மாதம் வரையிலான கால கட்டத்தில் நேரடி வரிவசூல் சிறப்பாக இருந்ததாகவும் ஆய்வறிக்கையில் உள்ளது. மேலும் பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சிறப்பாகவே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


நடப்பு நிதியாண்டில் வேளாண்துறையில் தனியார் துறையின் பங்களிப்பு 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. சிறு, குறு தொழில்துறையினருக்கான கடன் வழங்கல் 30.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 5 ஆண்டுகளில் அந்நிய முதலீடு 4 மடங்கு உயர்வு


கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் வரும் அந்நிய முதலீடு 4 மடங்கு உயர்ந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மருந்து உற்பத்தி தொழில் மட்டுமே 2000 கோடி டாலர் ரூ.1,63,440 கோடி அந்நிய முதலீடு குவிந்துள்ளதாக தெரிகிறது.


கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதன் இழப்பை மீட்டுவிட்டதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றும் மற்றும் உக்ரைன் போர் காரணமாக இழந்த பொருளாதாரம் மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம்  மிகச் சிறப்பாக மீண்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்பை பொருத்தவரை, வேலைவாய்ப்பின்னை விகிதம் கடந்த 2022ஆம் ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் 7.2 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 9 முக்கிய துறைகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகியிருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மொத்த வருவாய் 15.5 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. 2015 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கு இடையில் கிராமப்புற இணைய சந்தாக்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டில் விவசாயத்தில் தனியார் முதலீடு 9.3% ஆக அதிகரித்துள்ளது. 


தேசிய இயக்க திட்டத்தின் கீழ் 62.8 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகளும், 6.2 லட்சம் சமூக மற்றும் பொதுக் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.