அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.


எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைக்கப்பட்டு, மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடைசியாக, மும்பையில் நடத்தப்பட்ட கூட்டத்தில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஒருங்கிணைப்புக் குழு, துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


தென்னிந்தியாவை குறிவைக்கும் பாஜக?


பாஜகவும், தன்னுடைய கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன் முதல் முயற்சியாக, டெல்லியில் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை நடத்தியது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், டெல்லி கூட்டத்தில் அந்த கட்சி கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.


இந்த கூட்டத்தில், அதிமுக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்ட போதிலும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கலந்து கொள்ளவில்லை. இதனால், வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அக்கட்சி கூட்டணி அமைக்குமா? இல்லையா? என்பதில் தொடர் குழப்பம் நீடித்து வந்தது.


இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடா அறிவித்தார். கர்நாடகாவில் மும்முனை போட்டி ஏற்பட்டால், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நடந்தது போல பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.


அந்தர் பல்டி அடித்த தேவகவுடா:


இந்த நிலையில், அந்தர் பல்டி அடித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இது தொடர்பான  அறிவிப்பை கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா இன்று வெளியிட்டுள்ளார். பாஜக கூட்டணியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் நான்கு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து விரிவாக பேசிய எடியூரப்பா, "நமது பிரதமரை தேவகவுடா சந்தித்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 4 இடங்கள் தருவது இறுதி செய்யப்பட்டுள்ளது. இது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை வரவேற்கிறேன்" என்றார். பாஜகவிடம் 5 தொகுதிகளை கேட்டதாகவும் இறுதியில் 4 தொகுதிகளுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.


சமீபத்தில், டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தேவகவுடா சந்தித்து பேசினார். கடந்த காலங்களில், பல முறை இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், வேறுபாடுகள் காரணமாக கூட்டணியை முறித்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.


கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிட்டது. அந்த தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம், ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்த வாக்குகளில் 9.74 சதவீத வாக்குகளை பெற்றது. இந்தாண்டு மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.