தெலங்கானாவில் வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சித்திபேட் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சி எம்.பி. கொத்தா பிரபாகர் ரெட்டியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பி.ஆர்.எஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எம்பியை நோக்கி சென்று அவருடன் கைகுலுக்க முயற்சிப்பது போல் பாவனை செய்துள்ளார். ஆனால், அவர் திடீரென்று ஒரு கத்தியை எடுத்து எம்.பி.யின் வயிற்றில் குத்தினார்.


தேர்தல் பிரச்சாரத்தில் எம்.பி.க்கு கத்திக்குத்து:


கத்தியால் குத்திய நபரை பி.ஆர்.எஸ் கட்சி தொண்டர்கள் பிடித்து அடித்துள்ளனர். பாதிரியார் ஒருவரின் வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் சிகிச்சைக்காக கஜ்வேல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சித்திபேட் காவல் ஆணையர் என். சுவேதா கூறுகையில், "தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது விவரங்களை சரிபார்த்து வருகிறோம்" என்றார்.


மேடக் தொகுதி மக்களவை உறுப்பினரான பிரபாகர் ரெட்டிக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், துபாகா தொகுதி வேட்பாளராக பிரபாகர் ரெட்டியை ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி அறிவித்துள்ளது.


யார் இந்த பிரபாகர் ரெட்டி?


பாஜக எம்.எல்.ஏ. ரகுநந்தனுக்கு எதிராக பிரபாகர் ரெட்டி களம் காண்கிறார். முதலமைச்சராவதற்கு முன்பு சந்திரசேகர் ராவ், மேடக் தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியில்தான், பிரபாகர் ரெட்டி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.


ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசம், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு, அம்மாநில அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகு, அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி புது கட்சி தொடங்கினார். 


இதனால், இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் பலவீனம் அடைந்தது. ஆந்திரா பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறி கொடுக்க, தெலுங்கு தேசம் கட்சி அங்கு ஆட்சியை பிடித்தது. ஆனால், 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், தெலுங்கு தேச கட்சியை தோற்கடித்து ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. 


தெலங்கானாவை பொறுத்தவரை, கடந்த 9 ஆண்டுகளாக கே. சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆதிக்கம்தான் தொடர்ந்து வருகிறது.