திமுக அரசின் திராவிட மாடல் அரசு எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ள பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி உறுப்பினர்களை அக்கட்சியின் தலைவரும் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வருமான சந்திரசேகர் ராவ் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார்.


இரண்டு நாட்கள் சென்னையில் தங்கும் தெலுங்கானா உறுப்பினர்கள்


இரண்டு நாட்களுக்கு சென்னையில் இருக்கும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி உறுப்பினர்கள் தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டிஜிபி, காவல் துறை ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு மக்களுக்கான பணிகள் எப்படி நடைபெறுகிறது. எவ்வளவு விரைவாக மக்களின் குறைகளுக்கு திராவிட மாடல் அரசு தீர்வு காண்கிறது என்பதை அறியவுள்ளனர்.


பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரவை சந்திக்கும் குழு


இன்று மதியம் தலைமைச் செயலகம் செல்லும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி குழுவினர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனையும் அதன்பிற்கு அந்த துறையின் செயலாளரையும் தனித் தனியாக சந்தித்து, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அமைச்சரின் துறை எப்படி செயல்படுகிறது ? என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன? அவை மக்களுக்கு எப்படி தெரியப்படுத்தப்படுகின்றன ? எவ்வளவு விரைவாக மக்கள் பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் திட்டங்களை பெறுகின்றனர் உள்ளிட்ட விவரங்களை அமைச்சர் துறையின் மூலம் அறிந்துகொள்கின்றனர்.


சாதி வாரி கணக்கெடுப்பு குறித்தும் ஆலோசனை


மேலும், இந்திய அளவில் சாதி வாரியான கணக்கெடுப்பை எடுக்க வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் எத்தகைய சூழல் நிலவுகிறது, மாநில அரசே தன்னிச்சையாக சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த முடியுமா ? இதில் தமிழ்நாடு அரசின் கொள்கை என்ன என்பதையும் அமைச்சருடன் BRS குழுவினர் விவாதித்து தெரிந்துகொள்ளவுள்ளனர் 


அறிவாலயம் சென்றும் ஆலோசனை நடத்துகின்றனர்.


இது மட்டுமின்றி, நாளை திமுகவின் தலைமை அலுவலகமான அறிவாலயம் செல்லும் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி குழுவினர், அங்கு அந்த கட்சியின் முக்கியத் தலைவர்களை சந்தித்து திராவிட மாடல் குறித்தும் திராவிட இயக்கத்தின் சாதனை பற்றியும் பேசித் தெரிந்துக்கொள்ளவுள்ளனர்.


திடீர் பயணம் ஏன் ? சந்திரசேகரராவ் திட்டம் என்ன ?






கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மூன்றாவது அணியை அமைக்கும் தீவிர முயற்சியில் அன்றைய தெலுங்கானா முதல்வரும் பாரதிய ராஷ்ட்ரிய கட்சித் தலைவருமான சந்திரசேகர்ராவ் ஈடுபட்டுவந்தார். அப்போது அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சென்னையில் அவரது இல்லத்திற்கே வந்து சந்தித்து பேசினார். ஆனால், அவரது முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.


கடந்த தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடமும் ஆட்சியை இழந்தார் சந்திரசேகர்ராவ். தற்போது தெலுங்கானவை காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆட்சி செய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் உள்ள திமுகவின் செயல்பாடுகள் குறித்த அறிய சந்திரசேகர் ராவ் தன்னுடைய கட்சி குழுவை அனுப்பி வைத்துள்ளது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


திமுக செயல்பாடுகளை அறிய மாநிலம் விட்டு மாநிலம் வந்த உறுப்பினர்கள்


கட்சித் தொடங்கி 75 ஆண்டுகளை நிறைவு செய்து, பவள விழாவை திமுக கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில், தெலுங்கானா உறுப்பினர்கள் திராவிட மாடல் அரசு பற்றியும், திமுக என்ற கட்சி குறித்தும் அறிய தமிழ்நாடு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.