Breaking News LIVE: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,392 சிறப்பு பேருந்துகளை இயக்கம் - தமிழக அரசு அறிவிப்பு

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

ஆர்த்தி Last Updated: 03 Jan 2023 03:20 PM
Breaking News LIVE: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,392 சிறப்பு பேருந்துகளை இயக்கம் - தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப தமிழக அரசு 16,392 சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. 

அடுத்த 2 மணிநேரங்களில், செங்கல்பட்டில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பொழிவு இருக்கும் - வானிலை மையம்

அடுத்த 2 மணிநேரங்களில், செங்கல்பட்டில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பொழிவு இருக்கும் - வானிலை மையம்

Plus 2 Hall ticket: பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு; நாளை முதல் ஹால்டிக்கெட் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை பிற்பகல் 2 மணி முதல் மாணவர்கள் ஹால்டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 


மார்ச் 13ஆம் தேதி  முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர்.

அதிமுக வீழ்ந்து கிடந்த போதெல்லாம் மீண்டும் உயிர்பெறுவதற்கு பா.ம.க உடனிருந்தது.. பா.ம.க வழக்கறிஞர் பாலு பதிலடி..

அதிமுக வீழ்ந்து கிடந்த போதெல்லாம் மீண்டும் உயிர்பெறுவதற்கு பா.ம.க உடனிருந்தது அவர்கள் மறக்கக்கூடாது என பா.ம.க வழக்கறிஞர் பாலு முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு பதிலடி.


அதிமுக உடனான கூட்டணி குறித்து பேசும் சூழல் தற்போது இல்லை. ஜெயகுமார் கூறும் கருத்தை பெறிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார் பாலு. 

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை..

போதைப் பொருள் கடத்தல் கும்பல் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் ஊடுருவியதாக கிடைத்த தகவலில் பேரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது.


காவல்த்துறை உயர் அதிகாரிகள், பள்ளிக் கல்வித்துறை செயலர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Tamil Nadu tableau : குடியரசுதின விழா: தமிழ்நாடு அலங்கார ஊர்திகளை தேர்வு செய்த மத்திய அரசு!

டெல்லியில் இந்தாண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திகள் பங்கேற்க உள்ளது.
 


இந்தாண்டு குடியரசு தின ஊர்வலத்திற்கு தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு தேர்தெடுத்துள்ளது. கடந்தாண்டு தமிழகத்தின் ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு பங்கேற்கும்.

கேட் 2023-க்கான ஹால்டிக்கெட் வெளியீடு- டவுன்லோடு செய்வது எப்படி?

2023ஆம் ஆண்டுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வாக நடத்தப்படும் கேட் தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. தேர்வர்கள் gate.iitk.ac.in என்ற இணையதள முகவரி மூலம் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

Gayathri raguramm: “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; அண்ணாமலையே காரணம்” - பாஜகவில் இருந்து அதிரடியாக விலகி புகார்களை அடுக்கிய காயத்ரி!

கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாக, அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்,  ”பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் ஒரு வெளிநபரை போன்று விமர்சிக்கப்படுவதை நன்றாக உணர்கிறேன்.  கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உண்மையாக உழைப்பவர்களை விரட்டுவது மட்டுமே அண்ணாமலையின் ஒரே குறிக்கோள். பாஜகவுக்கு எனது நல்வாழ்த்துகள். மோடி ஜி நீங்கள் சிறந்த நபர், நீங்கள் தேசத்தின் தந்தை, நீங்கள் எப்போதும் என் விஸ்வகுரு மற்றும் சிறந்த தலைவர். அமித்ஷா ஜி நீங்கள் எப்போதும் என் சாணக்கிய குருவாக இருப்பீர்கள்” என குறிப்பிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் காயத்ரி ரகுராம் டேக் செய்துள்ளார்.

Covid 19: இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று.. இன்றைய கொரோனா நிலவரம் இதுதான்..

இந்தியாவில் கொரோனா தொற்று படிபடியாக குறைந்து வருகிறது. இன்று ஜனவரி 3ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 172 நபர்களுக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2670 ஆக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 207 பேர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

Background

பொங்கல் பரிசு தொகுப்பு:


தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பயனாளர்களுக்கு பச்சரிசி, சக்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு இல்லாததற்கு அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதைதொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும் இடம்பெறும் எனவும், இதனால் விவசாயிகள் பயனடைவர் என்றும் தமிழக அரசு அறிவித்தது.


டோக்கன் விநியோகம்:


அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் மாநிலம் முழுவதும் தொடங்குகிறது. வரும் 8ம் தேதிக்குள் அனைத்து பயனாளர்களுக்கும் டோக்கன் விநியோகம் செய்து முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் கடை ஊழியரகள் வீடு வீடாக சென்று பயனாளரகளுக்கு டோக்கன்களை வழங்க உள்ளனர். தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பரிசுப்பொருட்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு பயனாளர்களுக்கு  வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்காக பயனாளர்கள் ஒரே நேரத்தில் கூடி,  ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது. 


பொங்கல் பரிசு பெறுவது எப்படி?


பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெற ஸ்மார்ட் கார்ட்டுடன், குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரின் கைரேகையையும் பதிவு செய்ய வேண்டும். ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு  முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


புகார் தெரிவிக்கலாம்:


டோக்கனில் குறிப்பிட்டப்பட்டிருக்கும் தேதி, நேரம் ஆகியவற்றை  அறிந்து மக்கள் எவ்வித சிரமும் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். அதேசமயம் பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால்  புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


அமைச்சர் ஆலோசனை:


தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இந்த பொங்கல் பரிசுதொகுப்பினை, முறையாக வழங்குவது குறித்து, அமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.


திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்:


இதையடுத்து, பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 9ம் தேதி சென்னையிலும், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு  அமைச்சர்களும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர். 9ம் தேதி  தொடங்கி வரும் 13ம் தேதிக்குள் அனைத்து பயனாளர்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி முடிக்க தமிழக அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.