கேரளாவில் அதிவேகமாக பரவும் மூளை உண்ணும் அமீபா நோய்! 104 பேர் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு!
கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேரளாவில் மூளைக் காய்ச்சல் எனப்படும் அமீபா நோய் தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் தொற்றால் இதுவரை 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா ஃபோலேரி என்ற கிருமியால் ஏற்படும் இந்த அரிதான மற்றும் ஆபத்தான மூளைத் தொற்று நோயை கேரளா தற்போது எதிர்கொண்டு வருகிறது. கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த 2023- ஆம் ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, அனைத்து மூளைக் காய்ச்சல் பாதிப்புகளையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதன் காரணங்களைக் கண்டறிய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக, கடந்த 2024- ஆம் ஆண்டு முதல் என்செபாலிடிஸ் பாதிப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் சில அமீபிக் என்செபாலிடிஸ் பாதிப்புகளாகக் கண்டறியப்பட்டன. அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது முகநூல் பதிவில், இன்று அறிவிக்கப்பட்ட பாதிப்புகளையும் சேர்த்து, இதுவரை மொத்தம் 104 அமீபிக் என்செபாலிடிஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024- ஆம் ஆண்டிலேயே, இந்த நோயைக் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான பொதுவான மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. உலகளவில் நெய்க்லீரியா ஃபோலேரி நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 98 சதவீதம் என்றும், அகந்தமீபா நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 70 சதவீதத்திற்கும் மேல் என்றும் அமைச்சர் விளக்கினார். இவ்வளவு அதிக உலகளாவிய இறப்பு விகிதம் இருந்தபோதிலும், கேரளாவில் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைத்துள்ளோம் என்று அவர் கூறினார்.கடந்த 2025 ஆம் ஆண்டில், அமீபிக் என்செபாலிடிஸைத் தடுக்க ஒருங்கிணைந்த சுகாதார அணுகுமுறை அடிப்படையில் ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பல்வேறு துறைகள் இணைந்து மாநிலம் முழுவதும் அறிவியல் பூர்வமான குளோரினேஷன் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். மூளைக் காய்ச்சல் என்பது மூளையில் ஏற்படும் ஒரு தீவிரமான அழற்சி ஆகும். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அமீபிக் என்செபாலிடிஸ் என்பது நெய்க்லீரியா ஃபோலேரி என்ற ஒரு வகை அமீபாவால் ஏற்படும் ஒரு அரிய வகை மூளைத் தொற்று ஆகும். இந்த அமீபா பொதுவாக நன்னீர் நிலைகளில் காணப்படும். இது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை அடைகிறது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி பகுதியை சோ்ந்த 9 வயது சிறுமி, 3 மாத குழந்தை உள்பட ஏற்கனவே 7 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 48 வயது பெண் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கடும் காய்ச்சல், உடல் வலியால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருப்பினும், உடல்நலம் சரியாகாததால் கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பெண்ணின் உடலில் இருந்து மாதிரி சேகரித்து பரிசோதனை செய்ததில், அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து இருப்பது உறுதியானது. பின்னர் அந்த பெண் சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பெண் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதன் மூலம் அமீபா மூளைக்காய்ச்சலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து பெண் வீட்டில் உள்ள கிணறு, அருகே உள்ள குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்து மாதிரி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





















