BrahMos Deal: இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் புதிய மைல்கல் படைக்கப்பட்டுள்ளது. ரஷியாவின் உதவியோடு இந்தியாவால் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்கியுள்ளது. ஒப்பந்தத்தின்படி, ஏவுகணைகளின் முதல் தொகுப்பை பிலிப்பைன்ஸ் நாளை பெற உள்ளது. 


இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் மைல்கல்:


பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ்-க்கு எடுத்து செல்லும் பணியானது இந்திய விமானப்படையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, தேவையான உதவிகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏா்போா்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா உள்ளிட்டவை செய்து வருகின்றன.


இங்கு மக்களவை தேர்தல் தொடங்கும் அதே நேரத்தில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிஸ் பிரம்மோஸ் ஏவுகணைகள் தரையிறங்க உள்ளன. இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இது திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.


வெளிநாடு ஒன்றுடன் கையெழுத்தான மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் இதுவாகும். முதல் பிரம்மோஸ் ஏற்றுமதி ஏவுகணை நாக்பூரில் இருந்து IAF C-17 Globemaster போக்குவரத்து விமானத்தில் இன்று இரவு புறப்பட உள்ளது. நாளை (ஏப்ரல் 19ம் தேதி) அதிகாலை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை சென்றடையும். பிரம்மோஸ் ஏவுகணையின் கூடுதல் பாகங்கள், மூன்று சரக்கு விமானங்களில் எடுத்து செல்லப்பட உள்ளன.


சீனாவுக்கு செக் வைத்த இந்தியா:


மேற்கு பிலிப்பைன்ஸ் கடலில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸ்க்கும் தொடர் சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. இம்மாதிரியான சூழலில், பிலிப்பைன்ஸ் கடற்படையின் பாதுகாப்பு திறன்களை பிரம்மோஸ் ஏவுகணைகள் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கப்பலில் இருந்து ஏவப்படும் உலகின் அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ரஷ்யாவின் என்பிஓ மஷினோஸ்ட்ரோயெனியா அமைப்புடன் இணைந்து உருவாக்கியது.


இந்த ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கையெழுத்தான போதிலும், இது தொடர்பான அறிவிப்பு, கடந்த 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதமே இந்தியாவால் வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 374.96 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்திய மதிப்பில் 2,700 கோடி ரூபாயாகும்.


பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டும் நாடுகள்:


ஒப்பந்தத்தின்படி, பிலிப்பைன்ஸ் ஏவுகணை அமைப்புக்கு மூன்று ஏவுகணை பேட்டரிகளை இந்தியா வழங்கும். 290 கிலோமீட்டர் தூரத்திற்கு 2.8 மாக் (ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு) வேகத்தில் செல்லும் ஏவுகணைக்கு பேட்டரிகள் தயாரித்து வழங்கப்படும்.


ஏவுகணைகளை இயக்குபவர்களுக்கு பயிற்சி, ஏவுகணைகளை இந்தியாவில் இருந்து எடுத்து செல்வதற்கான தளவாட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட அம்சங்களும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், பிலிப்பைன்ஸ் கடற்படையின் 21 வீரர்களுக்கு ஆபரேட்டருக்கான பயிற்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.


பிலிப்பைன்ஸை தவிர்த்து இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.