பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தானுக்குள் ஏவப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் பணி நீக்க உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.


கடந்த மார்ச் மாதம் பிரம்மோஸ் ஏவுகணை ஒன்று தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் ஏவப்பட்டது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக் குழு அமைத்தது. வழக்கமான செயல்முறை வழிகாட்டுதல்களைத் தாண்டி எப்படி இந்த ஏவுகணை எப்படி பாகிஸ்தானுக்குள் பாய்ந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டது.


பாகிஸ்தானின் மியான் சன்னு பகுதியில் பிரம்மோஸ் ஏவுகணை விழுந்தது. பாகிஸ்தான் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அதற்கு முன்னதாகவே இந்தியா விசாரணை கமிஷனை அமைத்தது.


இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்ற மூன்று அதிகாரிகளும் இன்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.






இந்தியாவின் மிகவும் முக்கியமான ஏவுகணைகளில் ஒன்று பிரம்மோஸ் ஏவுகணை. இந்த ஏவுகணையை இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பு இணைந்து தயாரித்து வருகின்றன. இதன்காரணமாக இந்த ஏவுகணைக்கு பிரம்மபுத்ரா மற்றும் மாஸ்கோவா நதிகளின் பெயரை குறிக்கும் வகையில் பிரம்மோஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 


இந்த ஏவுகணையை நிலம், நீர் மற்றும் ஆகாயம் ஆகிய மூன்று தளங்களிலும் பயன்படுத்த முடியும். இந்த ஏவுகணையை ஒரு முறை ஏவிய பிறகு நாம் அதை கட்டுப்படுத்த தேவையில்லை. அதற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை சரியாக சென்றடையும் திறனை இது பெற்றுள்ளது. இது ஒலியின் வேகத்தைவிட 3 மடங்கு அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணைக்கு இரண்டு நிலைகள் உள்ளன. முதல் நிலையில் திடமான உந்துவிசையும், இரண்டாம் நிலையில் திரவ வடிவ உந்துவிசையும் உள்ளன.


இரண்டாம் நிலையில் இது காற்றில் உள்ள ஆக்சிஜனை திரவமாக பயன்படுத்தி கொண்டு செயல்படும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையில் அடிக்கடி டிஆர்டிஓ சில தொழில்நுட்ப மாற்றங்களை செய்து வருகிறது.அந்தவகையில்  பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ருயிஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடலில் ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.