பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை கற்பிக்கும் சாதிய அமைப்புக்கு எதிராக பல தலைவர்கள் தீவிரமாக இயங்கிய நிலையிலும், தற்போது வரை அதன் தாக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, உணவகங்களின் பெயர்களுக்கு பின்னே சாதிய பெயர்களை சேர்க்கும் போக்கு மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது.
உணவு விநியோக தளங்களான Zomato மற்றும் Swiggy-இல் இடம்பெற்றுள்ள பெங்களூரு உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் , தங்களின் பெயர்களில் “பிராமின்” என்ற பெயரை பயன்படுத்தி இருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெரும்பாலான இந்திய சமூகங்கள், தீவிர சாதிய உணர்வுடன் உணவகங்களுக்கு சாதிய பெயரை வைத்திருப்பது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவகங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ட்விட்டர் பயனாளி ஒருவர், பள்ளியில் சிறுவயதில் தனக்கு நேர்ந்த சாதிய கொடுமை குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அந்த பயனாளி, “குறிப்பிட்ட பிராமண உணவு என ஒன்றும் இல்லை. மீன் மற்றும் இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளை உண்ணும் பிராமணர்கள் துணைக்கண்டம் முழுவதும் உள்ளனர்.
உணவை அழகுபடுத்துவதற்கு என பிராமண வழி எதுவும் இல்லை. உங்கள் உணவகத்தின் பெயரை "பிராமணர்" என்று நீங்கள் அழைக்கும்போது, அது வெளிப்படையாக சாதியத்தை குறிக்கிறதே தவிர வேறொன்றுமில்லை" என பதிவிட்டுள்ளார்.
பிராமின்ஸ் தட்டு இட்லி, பிராமின் எக்ஸ்பிரஸ், அம்மாஸ் பிராமின் கஃபே, பிராமின் டிஃபின்ஸ் & காபி போன்ற பெயர்கள் Zomatoவில் உணவகங்கள் இயங்கி வருகின்றன. பிராமின்ஸ் உபஹர், பிராமின்ஸ் ஸ்பெஷல் புளியோகரே, பிராமின்ஸ் கிச்சன் உள்ளிட்ட பெயர்களில் ஸ்விக்கியில் உணவகங்கள் இயங்கி வருகின்றன.
2018 ஆம் ஆண்டு இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்தது. பெங்களூருவைச் சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம், சுத்தமான பிராமண மதிய உணவை வழங்குவதாக விளம்பரப்படுத்தியது. இந்த விளம்பரப் பதாகையின் படத்தை வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான டாக்டர். பி கார்த்திக் நவயானா ட்விட்டரில் வெளியிட்டு விமர்சித்திருந்தார்.
ஜே.பி. நகர் மற்றும் பி.டி.எம். லேஅவுட், புத்தேனஹள்ளி, பிலேகஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உள்பட பெங்களூரின் பல பகுதிகளில் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே தயாரிக்கப்பட்ட ‘தூய பிராமண’ உணவு டெலிவரி செய்யப்படும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது போன்ற விளம்பரம் செய்யப்படுவது இது முதல்முறை அல்ல.
சாதிய பெயர்களில் இயங்கும் உணவகங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்