பட்டதாரியாக இருப்பதாலேயே ஒரு பெண்ணை வீட்டை விட்டு வெளியேறி பணி செய்ய நிர்பந்திக்கக்கூடாது என மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 10 அன்று கூறியுள்ளது.


பட்டதாரியாக இருந்தும், பணி செய்வதா, வீட்டில் இருப்பதா என்பது பெண்களின் தேர்வு என்பதை வலியுறுத்தும் விதமாகப் பேசிய மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதி டாங்க்ரே, ஒரு பெண் பட்டதாரி என்ற ஒரே காரணத்திற்காக கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை எனக் கூறியுள்ளார். 


பூனேவின் குடும்ப நீதிமன்றம் ஒன்றில் மனைவிக்குப் பராமரிப்புக்குத் தொகை அளிக்குமாறு கூறியிருந்த உத்தரவை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த கணவர் ஒருவரின் வழக்கில் உத்தரவிட்ட நீதிபதி பாரதி டாங்க்ரே, பணிக்கு செல்ல வேண்டுமா, வீட்டில் இருக்க வேண்டுமா என்பதை அந்தப் பெண் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். 



`நமது வீடுகளில் இருக்கும் பெண்கள் வீட்டின் பொருளாதாரத்தில் பங்களிப்பதை நமது சமூகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பணிக்குச் செல்வது ஒரு பெண்ணின் விருப்பம். பட்டதாரி என்ற ஒரே காரணத்திற்காக வீட்டில் இருக்கக்கூடாது எனக் கூற முடியாது.. இன்று நான் நீதிபதியாக இருக்கிறேன்.. நாளை நான் என் வீட்டில் இருக்கலாம்.. `நீங்கள் நீதிபதிக்கான தகுதி கொண்டவர்...அதனால் வீட்டில் இருக்கக் கூடாது’ என என்னிடம் சொல்ல முடியுமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 


இந்த மனுவின் விசாரணையின் போது, ஏற்கனவே பணியில் இருக்கும் பெண்ணுக்கு பராமரிப்புத் தொகை வழங்குமாறு குடும்ப நீதிமன்றம் அநியாயமாக முடிவு செய்துள்ளதாக, மனுத்தாக்கல் செய்த கணவரின் வழக்கறிஞர் அபிஜித் சார்வாட்டே தெரிவித்தார். 


கடந்த 2010ஆம் ஆண்டு திருமணமான ஜோடி இருவரும் கடந்த 2013ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணும், அவர்களது மகளும் இணைந்து வாழ்ந்துள்ளனர். 



கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரையும், அவரது குடும்பத்தினரையும் எதிர்த்து குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் உரிமை முதலானவற்றிற்கான மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். 


இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், குடும்ப நீதிமன்றத்தில் தனது பராமரிப்புத் தொகை கோரியும் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். 


இதனைத் தொடர்ந்து பூனே குடும்ப நீதிமன்றம் கணவரிடம் ஒவ்வொரு மாதமும் தன் மனைவிக்கு 5 ஆயிரம் ரூபாய் பணமும், தன் குழந்தையின் பராமரிப்புக்கு 7 ஆயிரம் ரூபாய் பணமும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் மேர்கொண்ட மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.