மும்பையில், கடந்த 2005-ஆம் ஆண்டு முன்னாள் ராணுவ வீரருக்கும், (தற்போது 50 வயது) குறிப்பிட்ட பெண்மணிக்கும் விவாகரத்து தொடர்பான வழக்கானது மும்பையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கின் விசாரணை செய்த குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
மேல்முறையீடு
இதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து, அந்த பெண்மணி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த காலங்களிலே முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்( (விவாகரத்து செய்யப்பட்ட கணவர்) காலமானார். அதையடுத்து அவரது மகன் அவ்வழக்கில் ஆஜாராகி, வழக்கை எதிர்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கு கடந்த அக்.12-ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கணவரது தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, ”குழந்தைகள் மற்றும் பேரன்களை பார்க்க அந்த பெண்மணி தடுப்பதாக அவர் எழுதிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இது போன்ற செயல்களால் முன்னாள் ராணுவ வீரர் மன உளைச்சலால் இறந்து விட்டதாக” அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு:
இதையடுத்து, அந்த பெண்மணி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, அவரது முன்னாள் கணவர் குடிகாரர் என்றும் பெண்ணாசை பிடித்தவர் என்றும் தெரிவித்தார்.
நீதிமன்ற கருத்து
இதை கேட்ட நீதிபதிகள், ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகள் கூறுவது தவறு, ஆதாரமில்லாமல் ஒருவரை குடிகாரர் மற்றும் பெண்ணாசைக்காரர் என கூறுவது கொடுமையான செயல். மேலும் நீங்கள் குற்றம்சாட்டும் விஷயம் தொடர்பாக எந்தவிதமான ஆதாரங்களையும் நீங்கள் சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்தனர்.
மேலும், ராணுவத்தில் பணிபுரிந்த ஒருவரை, இதுபோன்ற ஆதாரமில்லாமல் கூறுவது மிகவும் கொடுமையானது என நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து, விவாகரத்து தொடர்பான மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.