பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரது லேட்டஸ்ட் பெண் தோழியை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
60-வது பிறந்தநாளை கொண்டாடும் அமீர் கான் கடந்த வந்த பாதை
1965-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்த அமீர் கான், 1973-ம் ஆண்டு இந்தி படமான யாதோன் கி பாரத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது திரை வாழ்க்கையை தொங்கியுள்ளார். பின்னர், 1988-ல் கயாமத் சே கயாமத் தக் படத்தில் ஹீரோவாக நடித்து, தனது முழுநேர சினிமா வாழ்க்கையை தொடங்கினார். ஹீரோவாக நடித்த முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால், பாலிவுட்டில் ஸ்டாராக மாறினார் அமீர் கான். தொடர்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்த அவர், 4 தேசிய விருதுகள், 9 ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றுள்ளார். இந்திய அரசால், 2003-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2010-ம் ஆண்டில் பத்ம பூஷண் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
ஒரு நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளர், இயக்குநர், பின்னணிப் பாடகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் அமீர் கான். தான் தயாரித்து இயக்கிய தாரே ஜமீன் பர் படத்திற்காக, சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்ஃபேர் விருதை இவர் வென்றுள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் காதலியை அறிமுகப்படுத்திய அமீர் கான்
இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் அமீர் கான். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக, கவுரி ஸ்ப்ராட் என்பவரை தனது காதலி என்றும், கடந்த ஒன்றரை வருடங்களாக அவர்கள் இணைந்து வாழ்ந்து வருவதாகவும் கூறி, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியனார். 60 வயதில் காதலியை அறிமுகப்படுத்தி அவர் மீது இளசுகளுக்கு பொறாமை ஏற்பட்டிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
அமீர் கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணமானவர். முதலில் தயாரிப்பாளர் ரீனா தத்தாவை திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இரண்டு வாரிசுகள் உள்ளனர். பின்னர், அவரை பிரிந்து, இயக்குநர் கிரண் ராவை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அவரையும் பிரிந்தார் அமீர் கான்.
இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன் கவுரியை தான் சந்தித்ததாகவும், நடுவில் சில காலம் தொடர்பு இல்லாமல் இருந்த நிலையில், சில வருடங்களுக்கு முன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டு, தற்போது காதலியாக அவர் மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கவுரியை அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார் அமீர் கான்.
கவுரியின் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராம். அவரது தந்தை ஐரிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், அவரது தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் கூறப்படுகிறது. கவுரி தற்போது அமீர் கானின் தயாரிப்பு நிறுவனத்தி பணிபுரிகிறார்.
வயசானாலும், உன் அழகும் ஸ்டைலும் குறையல என்ற வசனத்திற்கேற்ப, கட்டுமஸ்தாக உடலை வைத்திருக்கும் அமீர் கானை பார்த்து, இன்றைய இளசுகள் நிச்சயம் பொறாமை கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.