கர்நாடகாவில் பாஜக இளைஞரணியைச் சேர்ந்த பிரவீன் நெட்டாரு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.


வெடித்த போராட்டம்




கர்நாடகாவின் தட்சின் கன்னடா மாவட்டத்தில் நேற்றிரவு பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவைச் சேர்ந்த பிரவீன் நெட்டாரு வெட்டிக் கொல்லப்பட்டார். இதனையடுத்து கர்நாடகாவின் பல பகுதிகளில் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்துள்ளன.


இந்நிலையில், பாஜக தலைமையிலான மாநில அரசு கட்சித் தொண்டர்களின் உயிரை பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் கூறி, கர்நாடகாவின் பல பகுதிகளைச் சேர்ந்த இளைஞரணியினர் கூட்டமாக கட்சியிலிருந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.


மாநில பாஜக தலைவர் கார் சுற்றிவளைப்பு


மேலும், முன்னதாக கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலின் காரை போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்து அவரை சரமாரியாக தாக்கிய காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.


 






மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்


இந்நிலையில் 32 வயது பிரவீன் நெட்டாரு நேற்றிரவு தனது கோழிக்கடையை மூடிவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரைத் தாக்கியதாகவும், தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரவீனை உள்ளூர்வாசிகள் உதவியுடன் மீட்டதாகவும், தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


6 குழுக்கள் அமைப்பு


இந்நிலையில், கொலையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க ஆறு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 15 பேர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுதாகவும், கேரளா, மடிகேரி மற்றும் ஹாசன் ஆகிய பகுதிகளுக்கு மூன்று காவலர் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், முன்னதாக கர்நாடகா விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து பெல்லாரே, சுல்லியா பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.


காவல் துறை பாதுகாப்பு


இன்று காலை பிரவீனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கானோர் திரண்ட நிலையில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளே கொலைக்கு காரணமாக இருக்கக்கூடும் என வலதுசாரி அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.


 






இந்நிலையில், முன்னதாக பதற்றம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறை தலைவர் ருஷிகேஷ் சோனாய் தெரிவித்துள்ளார்.


மேலும், கேரள பதிவு எண் கொண்ட வண்டியில் மூன்று பேர் வந்து பிரவீனைத் தாக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருகிறோம்," எனவும் மாவட்டக் காவல் துறை தலைவர் ருஷிகேஷ் சோனாய் தெரிவித்துள்ளார்.


பசவராஜ் பொம்மை கண்டனம்


இந்தத் தாக்குதலுக்கு கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், விசாரணை துரிதகதியில் நடத்தப்பட்டு பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.


இச்சூழலில் உடுப்பி , தட்சிண கன்னடா மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளும் உணவகங்களும்  மூடப்பட்டுள்ள நிலையில், சில பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.