Electoral Bonds: நாடு முழுவதும் தேர்தல் பத்திரம் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் வரை, தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை தகவல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது.
தேர்தல் பத்திரத்தில் மெகா ஊழலா?
அதன் தொடர்ச்சியாக இன்று புது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 2018ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காலக்கட்டத்தில், பாஜக 2,190 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு மொத்தமாக, 8,250 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. பாஜகவுக்கு எவ்வளவு நன்கொடை சென்றுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகிய போதிலும், அதை யார் கொடுத்தார்கள் என்பது பற்றி தகவலை அக்கட்சி இன்னும் வெளியிடவில்லை.
ஆனால், திமுக, அதிமுக போன்ற கட்சிகள், தங்களுக்கு யார் நன்கொடை வழங்கியது என்பது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் திமுக சமர்பித்துள்ள தகவலின்படி, லாட்டரி தொழிலதிபரான சாண்டியாகோ மார்ட்டின், திமுகவுக்கு 509 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். அதேபோல, அதிமுகவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.
நன்கொடையாளர்கள் பட்டியலை வெளியிடாத பாஜக:
தங்களுக்கு யார் நிதி அளித்தார்கள் என்ற தகவலை திமுக, அதிமுக போன்ற கட்சிகள் வெளியிட்டப்போதிலும், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெளியிடாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளை வைத்து கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை வழங்கி இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சுமத்தி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், நன்கொடையாளர் பட்டியலை பாஜக வெளியிடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. தேர்தல் பத்திரங்களின் நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், தங்களிடம் அந்த விவரங்கள் இல்லை என்றும் தேர்தல் ஆணையத்திடம் பாஜக தெரிவித்துள்ளது.
பாஜக உள்பட பல கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெற்றபோதிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகள் தேர்தல் பத்திரம் மூலம் எந்தவித நன்கொடையும் பெறவில்லை என தெரிவித்துள்ளது.