கேள்வி எழுப்பிய பெண்...மோசமாக நடந்து கொண்ட பாஜக எம்எல்ஏ...தொடரும் விஐபி கலாசாரம்..!
கர்நாடகாவில் பெண் ஒருவரிடம் பாஜக எம்எல்ஏ மோசமாக நடந்து கொள்வது கேமராவில் சிக்கியுள்ளது.

கர்நாடகாவில் பெண் ஒருவரிடம் பாஜக எம்எல்ஏ மோசமாக நடந்து கொள்வது கேமராவில் சிக்கியுள்ளது. ஆய்வுக்கு சென்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் அரவிந்த் லிம்பவாலியிடம் தனது நிலத்தை அக்கிரமித்து உள்ளதாக பெண் ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.
இதையடுத்து, கோபமடைந்த பாஜக எம்எல்ஏ, அந்த பெண்ணிடம் சத்தம் போடுகிறார். பின்னர், காவல்துறையினர் அப்பெண்ணை பிடித்து செல்கின்றனர். பெங்களூருவில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், எம்எல்ஏ அதை கண்காணிக்க சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாதேவபுரா எம்எல்ஏவிடம் அப்பெண் ஏதோ சொல்ல முயற்சிப்பதை வீடியோவில் காணலாம். ஆனால், கொதித்தெழுந்த எம்எல்ஏ அவரை திட்டுகிறார். அந்த பெண்மணி கையில் ஒரு பேப்பரை வைத்திருக்கிறார். அதை எம்.எல்.ஏ.விடம் காட்ட அப்பெண் முயல்கிறார். ஆனால், எம்எல்ஏ அந்த காகிதத்தை கிழித்து எறிகிறார். பின்னர், அவரை காவலில் வைக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்த வீடியோ, தொடரும் விவிஐபி கலாசாரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறிய அரவிந்த் லிம்பவாலியின் மகள் போலீஸாரிடம் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் சமீபத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, தனது மகளுக்காக பாஜக எம்எல்ஏ மன்னிப்புக் கேட்டார். சம்பவம் நடைபெற்று மூன்று மாதங்களுக்குப் பிறகு தந்தையில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
பிரதமர் தொடங்கி கவுன்சிலர் வரை அனைவருமே மக்கள் பிரதிநிதிகள்தான். ஆனால், அவர்களில் சிலர் ஏஜமானர்கள் போல நடந்து கொள்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். மக்களுக்கான பிரச்னையை எழுப்பவே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதை விட்டுவிட்டு ஜனநாயகத்தின் ஏஜமானர்களான மக்களை அவமதிப்பது துரதிருஷ்டவசமான சம்பவம்.
தற்போதைய சூழலில், விஐபி கலாசாரம் என்பது மிகபெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் தானாக முன் வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.